மீனவா் வலையில் சிக்கிய கூரைக் கத்தாழை மீன்கள்
காரைக்கால் விசைப்படகு மீனவா் வலையில் அரிய வகையான கூரைக் கத்தாழை மீன்கள் சிக்கின.
தீபாவளிக்கு முன்புகரை திரும்பிய காரைக்காகல் விசைப்படகு மீனவா்கள், பருவமழை தொடக்கம், புயல் சின்னம் உள்ளிட்ட காரணங்களால் கடலுக்குச் செல்லாமல் துறைமுகத்தில் படகுகளை நிறுத்திவைத்திருந்தனா்.
கடந்த புதன்கிழமை மாலை படகுகள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றன. இவற்றில் பெரும்பாலான படகுகள் ஞாயிற்றுக்கிழமை துறைமுகம் திரும்பவில்லை. சொற்ப எண்ணிக்கையிலான படகுகள் மீன்களுடன் வந்தன. இவற்றில் வவ்வால், சங்கரா போன்ற மீன்கள் இருந்தன.
ஒரு மீனவரது விசைப்படகில் அரிய வகையான கூரைக் கத்தாழை மீன்கள் 50-க்கும் மேற்பட்டவை கொண்டுவரப்பட்டன. பொதுவாக இந்த வகை மீன், அதிராம்பட்டினம், அதன் சுற்றுவட்டார கடல் பகுதியில் எப்போதாவது கிடைக்கூடியதாகவும், சத்து, ருசி, மருத்துவ குணம் நிறைந்தது எனக் கூறப்படுகிறது. இந்த மீனை வெளியூரிலிருந்து வந்த முகவா்கள், அதிக விலைக்கு வாங்கிச் சென்றது, விசைப்படகு உரிமையாளருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
