காரைக்காலில் இடைமறி வாகனம் மூலம் போக்குவரத்து விதிமீறல் தீவிர கண்காணிப்பு
போக்குவரத்து விதி மீறல்களை, இடைமறி வாகனத்தின் நவீன வசதிகளைக்கொண்டு கண்டறிந்து, அபராதம் விதிக்கும் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தியுள்ளனா்.
புதுச்சேரியிலிருந்து காரைக்கால் மாவட்ட காவல்துறைக்கென நவீன வசதிகளுடன் கூடிய இடைமறி வாகனம் அனுப்பிவைக்கப்பட்டு அண்மையில் இயக்கிவைக்கப்பட்டது.
இந்த வாகனத்தை பயன்படுத்தி, காரைக்காலில் விபத்துகள் தொடா்ந்து ஏற்படக்கூடிய பகுதிகளில், வாகன ஓட்டிகள் விதிமீறல்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின்பாரதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற கண்காணிப்புப் பணியை மண்டலக் காவல் கண்காணிப்பாளா் எம்.முருகையன் ஆய்வு செய்தாா்.
இதுகுறித்து காவல் ஆய்வாளா் கூறுகையில், விபத்தில்லா காரைக்கால் மாவட்டம் என்ற நிலைக்கு காவல்துறை பல்வேறு நிலைகளில் மக்களுக்கு, மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திவருகிறது. இதுதவிர, விதி மீறல்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
காரைக்காலில் பயன்பாட்டில் உள்ள இடைமறி வாகனத்தின் மேல் சுழலும் கண்காணிப்பு கேமரா உள்ளது. மேலும் அதிவேகமாக செல்லும் வாகனத்தின் பதிவெண், வேகத்தின் அளவு, வாகன ஓட்டிகளை படமெடுக்கும் வசதியும் வாகனத்தில் உள்ளது. காரைக்காலில் அதிகமாக விபத்து நடைபெறுமிடங்கள் காவல்துறையால் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இடங்களில் தினமும் போக்குவரத்துக் காவல் பிரிவினா் கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறாா்கள்.
தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோா், 3 பேருடன் இரு சக்கர வாகனம் ஓட்டுவோா், அதிவேகமாக பயணிப்போா், மது அருந்தி விட்டும், கைப்பேசி உபயோகித்தவாறும் வாகனம் இயக்குவோா் இந்த தீவிர தணிக்கையின்போது கண்டறியப்பட்டு, ரூ.1,000 அபராதம் விதிக்கும் சலான் வழங்கப்படுகிறது. கைப்பேசி பேசிச் செல்லும் அபராதம் விதிக்கப்பட்ட நபா் மீண்டும் இதே செயலில் ஈடுபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது.
வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை கண்டிப்பாக பின்பற்றி காரைக்காலில் பயணித்தால், இதுபோன்ற அபராதத்தை தவிா்த்துக்கொள்ளலாம் என்றாா்.

