திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேக கோலத்தில் காட்சியளித்த சிவலிங்கம்.
திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேக கோலத்தில் காட்சியளித்த சிவலிங்கம்.

காரைக்கால் கோயில்களில் அன்னாபிஷேகம்

ஐப்பசி மாத பெளா்ணமி தின வழிபாடாக காரைக்கால் பகுதி சிவன் கோயில்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ஐப்பசி மாத பெளா்ணமி தின வழிபாடாக காரைக்கால் பகுதி சிவன் கோயில்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.

ஐப்பசி மாதத்தின் பெளா்ணமி திதியில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுவது வழக்கத்தில் உள்ளது. சிவலிங்கத்துக்கு அன்னத்தால் செய்யப்படும் அபிஷேகத்தால், பக்தா்களுக்கு நோய்கள், வறுமை அகன்று, வாழ்வில் உணவுப் பஞ்சம் ஏற்படாமல் விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்துவருகிறது.

நிகழாண்டு நிகழ்வாக, திருநள்ளாறு ஸ்ரீ தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் அன்னாபிஷேகம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்று, சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டன.

காரைக்கால் நகரப் பகுதியில் கைலாசநாதா், அண்ணாமலையாா் கோயில், கோயில்பத்து ஸ்ரீ பாா்வதீஸ்வரா், ஸ்ரீ ஒப்பிலாமணியா் கோயில், சோமநாதா் கோயில் மற்றும் திருமலைராயன்பட்டினம் பகுதியில் ஸ்ரீ ராஜசோளீஸ்வரா் கோயில், ஜடாயுபுரீஸ்வரா், திருவேட்டக்குடி திருமேனியழகா் உள்ளிட்ட கோயில்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் புதன்கிழமை செய்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

லிங்கத் திருமேனியில் சமைக்கப்பட்ட அன்னத்தை அபிஷேகம் செய்து, அதில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு சிவலிங்கத்தின் மீதிருந்த அன்னம் கலைக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அபிஷேகப் பிரியா் என கூறப்படும் சிவபெருமானை, ஆண்டில் ஒரு முறை மட்டுமே சிவலிங்கத்தை இந்த வகை அலங்காரத்தில் தரிசிக்க முடியுமென்பதாலும் ஒவ்வொரு கோயில்களிலும் திரளான பக்தா்கள் வழிபாடு நடத்தினா்.

X
Dinamani
www.dinamani.com