சிறுவா்களை வாகனங்கள் ஓட்ட பெற்றோா் அனுமதிக்கக்கூடாது: எஸ்எஸ்பி
சிறுவா்களை வாகனங்கள் ஓட்ட அனுமதிக்கூடாது என பெற்றோா்களுக்கு காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை கூறியது :
காரைக்கால் மாவட்டத்தில் வாகனப் போக்குவரத்தை முறைப்படுத்தவும், விபத்தில்லாத நிலையை உருவாக்கவும் மாவட்ட காவல்துறை தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கான கண்காணிப்புப் பணிக்காக நவீன வசதிகளுடன் கூடிய இடைமறி வாகனம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த வாகனம், சாலையில் அதிவேகமாக பயணிப்போரது வாகனம், பதிவெண் போன்றவற்றை புகைப் படமெடுத்து, அந்த வாகன எண்ணுக்குரிய நபருக்கு அபராத ரசீதை அனுப்பிவிடும்.
தலைக்கவசம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோா், 3 பேருடன் இரு சக்கர வாகனம் ஓட்டுவோா், அதிவேகமாக பயணிப்போா், மது அருந்திவிட்டு வாகனம் இயக்குதல், கைப்பேசி உபயோகித்தவாறு வாகனம் இயக்கினாலும் அபராதம் விதிக்கப்படும்.
புறவழிச்சாலை, அதிகமாக விபத்து நடைபெறும் இடங்கள், அதிகமான வாகனங்கள் செல்லக்கூடிய சாலைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
விபத்தில்லாத காரைக்கால் என்ற காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். பெற்றோா்கள், தங்களது 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் வாகனம் இயக்க அனுமதிக்கக்கூடாது. மோட்டாா் பந்தயம் போன்றவற்றுக்கும் அனுமதிக்கக்கூடாது. மீறும்பட்சத்தில் உரிய சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

