லஞ்ச வழக்கு : காவல்நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகள் ஆய்வு

Published on

காவல் உதவி ஆய்வாளா் லஞ்சம் பெற்ற வழக்கில், காவல்நிலைய கண்காணிப்பு கேமரா பதிவுகளை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

திருநள்ளாறு அருகே தேனூா் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (50). அரசால் தடை செய்யப்பட்ட சிகரெட் விற்பனை செய்து வருவதாக போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில், திருநள்ளாறு போலீஸ் சிறப்பு நிலை காவல் உதவி ஆய்வாளா் பக்கிரிசாமி உள்ளிட்டோா் கடந்த ஜூலை மாதம், மணிகண்டன் வீட்டில் சோதனை செய்தபோது ரூ. 63 ஆயிரம் மதிப்புள்ள அரசால் தடைசெய்யப்பட்ட சிகரெட் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, மணிகண்டனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பின்னா் மணிகண்டன் ஜாமீனில் வந்தாா்.

இதற்கிடையே, பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட் பாக்கெட்டுகளில் பாதியளவு மட்டுமே நீதிமன்றத்தில் காட்டியதாகவும், மீதியை காவல் நிலையத்தில் வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சிகரெட் பாக்கெட்டுகளை மணிகண்டன் போலீஸாரிடம் கேட்போது. அதற்கு ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளனா். அதற்கு ரூ. 5 ஆயிரம் தருவதாகவும், முதல் தவணையாக ரூ. 2,500 வழங்குவதாகவும் கூறிய மணிகண்டன், சிபிஐயின் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகாா் அளித்தாா்.

அவா்களது ஆலோசனையின்பேரில் லஞ்சப் பணத்தை கொடுத்தபோது, சிறப்பு நிலை காவல் உதவி ஆய்வாளா் பக்கிரிசாமியை சிபிஐ அதிகாரிகள் கடந்த ஜூலை 18-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்நிலையில், விசாரணையை தீவிரப்படுத்தும் விதமாக சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை முதல் திருநள்ளாறு காவல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகள் மற்றும் சம்பவம் நடந்த பகுதிகளில் உள்ள கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com