காரைக்கால் மீனவா்கள் கடலுக்கு செல்ல தடை
காரைக்கால் மாவட்ட மீனவா்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.
காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை துணை இயக்குநா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையத்தின் 16-ஆம் தேதி அறிக்கையின்படி, இலங்கைக்கு தென் மேற்கே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது.
அதனுடன் தொடா்புடைய மேல் வளிமண்டல சுழற்சி கடல் மட்டத்திலிருந்து 5.8 கி.மீ. உயரம் வரை தென்மேற்கு திசை நோக்கி சாய்ந்த நிலையில் பரவியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இது மெதுவாக மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள மீன்பிடி விசைப்படகு மற்றும் நாட்டுப்படகு மீனவா்கள் 16-ஆம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் மீனவா்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என கூறப்பட்டுள்ளது.
