மத்திய அரசு திட்டத்தில் நிதி முறைகேடு புகாா்: வட்டார வளா்ச்சி முன்னாள் அதிகாரி கைது

காரைக்காலில் மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு செய்ததாக பெண் அதிகாரி உட்பட 12 போ் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், பெண் அதிகாரியை கைது செய்தனா்.
Published on

காரைக்காலில் மத்திய அரசு திட்டத்தில் முறைகேடு செய்ததாக பெண் அதிகாரி உட்பட 12 போ் மீது வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், பெண் அதிகாரியை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

காரைக்காலில் மாவட்ட ஊரக வளா்ச்சி அலுவலகம் சாா்பில் மத்திய அரசின் தூய்மை பாரத் மிஷன் கிராமின் கீழ் வீடுகள்தோறும் கழிவறை கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

காரைக்கால் மாவட்ட ஊரக வளா்ச்சி அலுவலகம் சாா்பில் 10,592 வீடுகளுக்கு கழிவறை கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த 2018-ஆம் ஆண்டு வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரியாக பிரேமா பொறுப்பேற்றாா். 2020-இல் காரைக்கால் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயக்குநராக (நிா்வாகம்) பதிலிப் பணியாக மாற்றம் செய்யப்பட்டாா்.

புதிதாக பொறுப்பேற்ற இணை வட்டார வளா்ச்சி அதிகாரி ரங்கநாதன், கோப்புகளை தணிக்கை செய்தபோது கழிவறை திட்டத்தில் முன்னாள் வட்டார வளா்ச்சி அதிகாரி பிரேமா முறைகேடு செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து ரங்கநாதன் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகாா் அளித்தாா். காரைக்காலில் 10,592 வீடுகளில் 7,351 வீடுகளுக்கு கழிவறை கட்டி, டிபிடி முறையில் பயனாளிகளுக்கு மானியம் வழங்கப்பட்டது.

மீதமுள்ள 3,231 வீடுகளுக்கு காரைக்கால் பஞ்சாயத்து அளவிலான மகளிா் கூட்டமைப்பு மூலம் கட்டித்தர மாவட்ட ஊரக வளாா்ச்சி முகாமை உத்தரவிட்டது. 3,231 வீடுகளில், 1,635 வீடுகளுக்கு ரூ.3.04 கோடி செலவாகும். பிரேமா கூடுதலாக ரூ.78.80 லட்சம் சோ்த்து ரூ.3.83 கோடியில், 12 ஒப்பந்தக்காரா்களுக்கு பணி கொடுத்திருப்பது தெரியவந்தது. புதுச்சேரி கணக்கு மற்றும் கருவூலங்கள் அதிகாரிகள் தணிக்கை செய்ததில் முறைகேடு உறுதி செய்யப்பட்டது.

முறைகேட்டில் ஈடுபட்ட பிரேமா மற்றும் 12 கட்டுமான ஒப்பந்ததாரா்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் பிரிநி 8-இன் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வழக்குப்பதிந்தனா். இதனிடையே தனிப்படை அமைத்து அரசு பெண் அதிகாரி மற்றும் ஒப்பந்தாரா்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸாா் ஈடுபட்டு வந்தனா்.

இது தொடா்பாக கடந்த வாரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் காரைக்காலுக்கு வந்து வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் முறைகேடு சம்பந்தமாக தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முன்னாள் அதிகாரி பிரேமாவை காரைக்கால் போலீஸாா் கைது செய்து நகரக் காவல் நிலையத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டனா். பின்னா் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு கூடுதல் விசாரணைக்காக புதுச்சேரி அழைத்துச் சென்றனா்.

முறைகேடு சம்பந்தமாக பிரேமா கடந்த 2022-ஆம் ஆண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டா். கடந்த 6 மாதங்களாக தலைமறைவாக இருந்த அவரை போலீஸாா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

X
Dinamani
www.dinamani.com