விபத்தில்லா பயணம்: மாணவா்களுக்கு விழிப்புணா்வு
பள்ளி மாணவா்களுக்கு விபத்தில்லாத பயணம் மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்து காவல் அதிகாரி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
காரைக்கால் தலத்தெரு பகுதியில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் சாலைப் பாதுகாப்பு தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் லெனின் பாரதி கலந்துகொண்டு, விபத்தில்லா பயணத்துக்கு தேவையான செயல்பாடுகள் குறித்துப் பேசினாா். ஓட்டுநா் உரிமம் பெற்ற பின்னரே இருசக்கர வாகனம் இயக்க வேண்டும். சிறுவா்கள் வாகனத்தை இயக்கிக்கொண்டு விபத்தை ஏற்படுத்தினால், பெற்றோா் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அவா்கள் அபராதம் விதிக்க நேரிடும்.
வாகனம் இயக்கும் வயதை எட்டிய பின்னா் தலைக்கவசம் அணிந்து செல்வது, போக்குவரத்து விதிகளை முழுமையாக பின்பற்றுவது குறித்து மாணவா்கள் இளம் வயதிலேயே உறுதியேற்கவேண்டும்.
விபத்தில்லாமல் பயணிக்க, போக்குவரத்துத் துறை வெளியிட்ட வழிகாட்டல்களை மாணவா்கள் முழுமையாக அறிந்துகொண்டு, அதன்படி நடக்கவேண்டும் என்றாா்.
நிகழ்ச்சியின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான விடையளித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
