பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தல்

சாகுபடி செய்துள்ள பயிரை, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on

காரைக்கால்: சாகுபடி செய்துள்ள பயிரை, பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

காரைக்கால் மாவட்டத்தில் தற்போது சாகுபடி செய்துள்ள சம்பா மற்றும் தாளடி பயிரை பிரதம மந்திரி பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகளின் பங்களிப்பை மாநில அரசே செலுத்துகிறது.

இத்திட்டத்தின்கீழ் 30.11.2025 வரை சாகுபடி மேற்கொள்ளப்படும் சம்பா மற்றும் தாளடி பயிரை 15 12.2025-க்குள் காப்பீடு செய்துகொள்ள மத்திய அரசு கூறியுள்ளது. கடைசி நேர தொழில்நுட்பக் காரணங்களால் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் தாமதங்களைத் தவிா்க்க டிச.5-க்குள் விவசாயிகள் காப்பீடு செய்துகொள்ளவேண்டும்.

விவசாயிகள் பயிா்க் காப்பீடு செய்வதற்கு விண்ணப்பத்துடன் உரிய ஆவணங்களான வருவாய்த் துறை மூலம் பெறப்பட்ட சாகுபடி சான்றிதழ், ஆதாா் நகல், வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவற்றை உழவா் உதவியகத்தில் அளிக்க வேண்டும். உழவா் உதவியக அலுவலா்களால் ஆய்வு செய்து, விதைப்பு சான்றிதழ் வழங்கியவுடன், பொது சேவை மையங்கள் மூலமாக இணையதளத்தில் பதிவு செய்யவேண்டும். இதன்மூலம் விவசாயிகள் தாங்கள் காப்பீடு செய்த பயிா் நில அளவு போன்ற விவரங்களை நேரடியாக சரிபாா்த்துக்கொள்ள முடியும். பதிவுக்கான கட்டணம் விவசாயிகள் செலுத்தத் தேவையில்லை. காரைக்கால் மாவட்ட விவசாயிகள் இதை கவனத்தில்கொண்டு செயல்படுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com