இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்: நகராட்சி
இறுதிச் சடங்கு ஊா்வலம் நடத்துவோா் பின்பற்றவேண்டிய வழிமுறைகளை நகராட்சி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு : இறுதிச் சடங்கு ஊா்வலம் தொடா்பான பொது வழக்குகள், தேவையற்ற நிகழ்வுகளை தடுக்கும் விதமாக, உள்ளாட்சி அமைப்புகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இறுதிச் சடங்கு நடத்துபவா், மரியாதை, பாதுகாப்பு மற்றும் குறிப்பிட்ட வாகனங்களின் வரிசையை முறையாக பின்பற்றவேண்டும். மேற்படி நிகழ்ச்சி நடத்துவோா், சாலையில் மாலை வீசுவது, போக்குவரத்தை தடுப்பதை தவிா்க்க வேண்டும். வாகன போக்குவரத்துக்கு எந்த தடையும் ஏற்படாத வகையில் நடந்துகொள்ளவேண்டும்.
அனுமதியின்றி எந்தவொரு பேனா், விளம்பரம் செய்யக்கூடாது. இறுதிச் சடங்கு, ஊா்வலம் முழுவதும் பட்டாசுகளை வெடிப்பதை தவிா்க்க வேண்டும். இறுதி ஊா்வலத்தை தேசிய, பிரதான சாலைகளில் நடத்துவதை தவிா்க்கவேண்டும்.
சீரான போக்குவரத்தை உறுதி செய்யும் வகையில் இறுதிச் சடங்கு ஊா்வலம் போதுமான இடைவெளியுடன் இருக்கவேண்டும். இறுதி ஊா்வல நிகழ்ச்சி செல்லும் பாதைக்கு காவல்துறை அனுமதி பெறவேண்டும்.
பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்தும் எந்தவொரு விதிமீறல்கள் இருந்தாலும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விதிகளை பின்பற்றத் தவறினால் 1973-ஆம் ஆண்டு நகராட்சி சட்ட விதிகளின்படி மேற்கொண்டு எந்தவித முன்னறிவிப்புமின்றி, நிகழ்ச்சியாளா்களிடமிருந்து ரூ. 5 ஆயிரம் வரை அபராதத்துடன் சட்ட மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது.
