கிளிஞ்சல்மேடு எல்லையம்மன் கோயில் தேரோட்டம்
காரைக்கால்: காரைக்கால் கடலோர கிராமமான கிளிஞ்சல்மேட்டில் உள்ள எல்லையம்மன் கோயிலில் புதிதாக தோ் செய்யப்பட்ட நிலையில், 50 ஆண்டுகளுக்குப் பின்னா் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் மூலவராக எல்லையம்மன் மற்றும் மாரியம்மன், செல்வ விநாயகா், பால தண்டாயுதபாணி ஆகிய சந்நிதிகள் உள்ளன. திருப்பணிகள் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்றுவந்து, கடந்த செப். 4-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இக்கோயிலுக்கென வருடாந்திர உற்சவ காலத்தில் தேரோட்டம் நடைபெற்று வந்துள்ளது. 1976-ஆம் ஆண்டு முதல் தேரோட்டம் நிறுத்தப்பட்டது. சுவாமி வீதியுலா கொண்டு செல்ல கிராமத்தினா் முடிவு செய்து, ரூ. 60 லட்சத்தில் புதிதாக தோ் செய்தனா். இதன் வெள்ளோட்டம் கடந்த செப்.1-ஆம் தேதி நடைபெற்றது.
தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முன்னதாக கோயிலில் மூலஸ்தான அம்மனுக்கும், உற்சவ அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் உற்சவ அம்மன் தேருக்கு எழுந்தருளச் செய்யப்பட்டாா். சிறப்பு நாகசுர, மேள வாத்தியங்களுடன் திரளான பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். நான்கு வீதிகளில் வலம்வந்த தோ் மதியம் 12 மணியளவில் கோயில் வாயில் வந்தடைந்தது.

