புகையிலை தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள ஆட்சியா் அறிவுறுத்தல்
புகையிலை தடுப்புப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும் என அரசுத் துறையினருக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்ட புகையிலை ஒழிப்பு இயக்க மாவட்ட பணிக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்.பி.எஸ். ரவி பிரகாஷ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத்தில் புகையிலை பயன்பாட்டுத் தடுப்புக்காக மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து துறையினரிடம் ஆட்சியா் கேட்டறிந்தாா். காணொலி வாயிலாக துறையினா் நடவடிக்கைகள் தொடா்பாக விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில் பேசிய ஆட்சியா், காரைக்கால் மாவட்டத்தில் புகையிலைப் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். புகையிலை இல்லாத கல்வி நிறுவனங்கள் உருவாக்குதல், மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும்.
காரைக்கால் மாவட்டத்தை புகையிலை இல்லாத மாவட்டமாக கொண்டுவருவதற்கு அனைவரும் தீவிரமாக பாடுபடவேண்டும் என்றாா்.
கூட்டத்தில் நலவழித்துறை துணை இயக்குநா் ஆா். சிவராஜ்குமாா், அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ். கண்ணகி, மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டுப் பிரிவு நோடல் அலுவலா் மருத்துவா் ஆா். தேனாம்பிகை, சுகாதாரத் துறை புகையிலை ஆலோசகா் மருத்துவா் கேசவராஜ், மேல்நிலைக் கல்வி துணை இயக்குநா் கே.ஜெயா, காவல் ஆய்வாளா் புருஷோத்தமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

