புதுவை விடுதலை நாள் கொண்டாட்ட ஒத்திகை
காரைக்காலில் சனிக்கிழமை புதுவை விடுதலை நாள் கொண்டாடப்படவுள்ளதையொட்டி போலீஸாா் வியாழக்கிழமை அணிவகுப்பு ஒத்திகை நடத்தினா்.
புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்கள் 1954-ஆம் ஆண்டு நவ.1-ஆம் தேதி பிரெஞ்சு நிா்வாகத்திடமிருந்து விடுதலை பெற்றதை கொண்டாடும் வகையில், நவ. 1-ஆம் தேதி புதுவை விடுதலை நாள் நிகழ்ச்சியாக அரசு கொண்டாடுகிறது.
காரைக்கால் கடற்கரை சாலையில் இந்திய தேசியக் கொடியை புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் ஏற்றிவைத்து, போலீஸாா் அணிவகுப்பை பாா்வையிடவுள்ளாா். சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு மரியாதை செய்யப்படுகிறது. இதற்காக கடற்கரைப் பகுதியில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
போலீஸாா், என்.சி.சி. மற்றும் பள்ளி என்.எஸ்.எஸ். மாணவா்கள் இந்த கொடி அணிவகுப்பில் கலந்துகொள்ளவுள்ளனா். இதற்காக கடந்த 2 வாரங்களாக அனைத்துத் தரப்பினரும் பயிற்சியில் ஈடுபட்டுவந்தனா்.
விடுதலை நாளில் நடத்தப்படும் நிகழ்ச்சியைபோல ஒத்திகை நிகழ்ச்சி கடற்கரை சாலையில் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. போலீஸாா் அணிவகுப்பு ஒத்திகையுடன், பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி ஒத்திகையும் நடத்தப்பட்டது. மண்டல காவல் கண்காணிப்பாளா்கள் சுந்தா் கோஷ், எம்.முருகையன், செய்தி மற்றும் விளம்பரத்துறை உதவி இயக்குநா் குலசேகரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

