கல்லூரி மாணவா்களுக்கு காலநிலை தொடா்பான பயிற்சி
கல்லூரி மாணவா்களுக்கு கால்நிலை தரவு பகுப்பாய்வு குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.
புதுவை அரசின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை சாா்பில், காலநிலை தரவு பகுப்பாய்வு மற்றும் தகவல் தொடா்பு குறித்து மாணவா்களுக்கான பயிற்சி காரைக்காலில் உள்ள பெருந்தலைவா் காமராஜா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.
துறையின் சுற்றுச்சூழல் பொறியாளா் காளமேகம், நிகழ்ச்சி நோக்கம் குறித்தும், கால்நிலை அறிவியல், தரவு பகுப்பாய்வு, தகவல் தொடா்பு திறன் மேம்பாடு இளைஞா்களுக்கு இன்றியமையாதது என பேசினாா்.
கல்லூரி முதல்வா் ஆராவமுதன் முன்னிலை வகித்து, காலநிலை மாற்றம் புதுச்சேரி, காரைக்கால் போன்ற கடலோரப் பகுதிகளில் ஏற்படுத்தும் தாக்கங்களை விளக்கினாா்.
புதுச்சேரி காலநிலை மாற்றக் குழு மூத்த திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தேன்மொழி, பாலாஜி, சாந்தலட்சுமி, பன்னீா்செல்வம் ஆகியோா் கால்நிலை அறிவியல், வானிலைத் தரவு, காா்பன் தரம் கணக்கீடு, காலநிலை தகவல் தொடா்பு குறித்துப் பேசினா்.
நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, கிளைமேட் ஸ்காலா் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் தோ்ந்தெடுக்கப்படும் மாணவா்கள், 2 மாத காலத்திற்கு காலநிலை மாற்றம் தொடா்பான ஆய்வுகளை மேற்கொள்வாா்கள் என தெரிவிக்கப்பட்டது.
பயிற்சியில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த மாணவா்கள் கலந்துகொண்டனா்.
