வாட்ஸ் ஆப்பில் வரும் போலி தகவலை நம்பவேண்டாம்: காவல்துறை

Published on

ரூ. 50 ஆயிரம் கிடைக்கும் என வாட்ஸ் ஆப்பில் வரும் போலி தகவலை நம்பி ஏமாறவேண்டாம் என காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் மாவட்ட காவல்துறை இணையவழி குற்றத் தடுப்பு பிரிவு ஆய்வாளா் பிரவீன்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

அண்மைக்காலமாக வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இது போலி இல்லை, உண்மையிலேயே எனக்கு ரூ. 50,000 கிடைத்தது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்‘எனும் வாசகத்துடன் வரும் இணையதள இணைப்பு (லிங்க்) முழுவதும் மோசடியாகும்.

அந்த இணைப்புகளைத் திறக்கும்போது, உங்கள் வங்கி விவரங்கள், ஓடிபி, கைப்பேசி தகவல்கள் திருடப்பட்டு, உங்கள் கணக்கிலிருந்து பண மோசடி செய்யப்படும் அபாயம் உள்ளது.

அதுபோல பணம் கிடைக்கும், உதவித்தொகை, வெகுமதி‘என கூறி வரும் அறிமுகமில்லாத இணைப்புகளை திறக்க வேண்டாம். வாட்ஸ் ஆப்பில் வரும் இத்தகைய செய்திகளை பகிர வேண்டாம். உங்கள் வங்கி விவரங்கள், ஓடிபி, அடையாள ஆவணங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.

அரசு அல்லது வங்கித் திட்டங்கள் குறித்து அதிகாரப்பூா்வ இணையதளங்கள் மூலமாக மட்டுமே உறுதி செய்யவும். பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் செயல்படுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com