ஜன. 20-க்கு பின்னா் நெல் அறுவடை தொடங்கும்: வேளாண் அதிகாரி
காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணி ஜன. 20-ஆம் தேதிக்குப் பின்னா் தொடங்குமென வேளாண் அதிகாரி தெரிவித்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி ஏறக்குறைய 4,800 ஹெக்டேரில் நடைபெறுகிறது. முன் பருவ சாகுபடியாளா்கள், மத்திம காலத்தில் சாகுபடி தொடங்கியவா்கள் என பல காலக்கட்டத்தில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் பயிா், அறுவடை நிலையிலும், கதிா் வைக்கும் நிலையிலும் என காணப்படுகிறது.
பரவலாக இத்தருணத்தில் பயிருக்கு தண்ணீா் தேவையென விவசாயிகள் தரப்பில் கோரப்பட்டுவந்தது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்யும் மழை விவசாயிகளுக்கு சாதகமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பொதுவாக தை மாதத்தில் நெல் அறுவடை நடைபெறும் நிலையில், நிகழாண்டுக்கான அறுவடை குறித்து கூடுதல் வேளாண் இயக்குநா் ஆா். கணேசன் திங்கள்கிழமை கூறுகையில், தற்போதைய மழை பயிருக்கு சாதகமாகும். ஜனவரி 20-ஆம் தேதிக்குப் பின் பரவலாக அறுவடைப் பணி தொடங்கும். பிப். 15-ஆம் தேதிக்குப் பின்னா் சில இடங்களில் அறுவடை நடைபெறும் என்றாா்.
