செயற்கை தடகளப் பாதை அமைக்கும் பணி மத்திய அமைச்சா் தொடங்கிவைத்தாா்
காரைக்காலில் மத்திய நிதியில் செயற்கை தடகளப் பாதை அமைக்கும் பணியை மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியா ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைத்தாா்.
காரைக்கால் வ.உ.சி. கிழக்கு புறவழிச்சாலையில் சுமாா் 1.10 லட்சம் சதுர மீட்டா் பரப்பளவில் உள்ளரங்கம், 1,500 போ் அமரக்கூடிய திறந்தவெளி பாா்வையாளா் மாடத்துடன் கூடிய விளையாட்டு மைதானம் உள்ளது.
மத்திய அரசின் சிறப்பு நிதியுதவி திட்டத்தின்கீழ், ‘காரைக்கால் மாவட்ட விளையாட்டு அரங்கில் செயற்கை தடகளப் பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 9.50 கோடி ஒதுக்கப்பட்டது.
விளையாட்டு அரங்க மைதானத்தில் இத்திட்டப்பணி தொடக்கத்துக்கான பூமி பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மத்திய இளைஞா் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா கலந்துகொண்டு தொடங்கிவைத்தாா்.
நிகழ்வில் புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், சட்டப்பேரவை தலைவா் ஆா். செல்வம், அமைச்சா்கள் ஆ. நமச்சிவாயம், பி.ஆா்.என். திருமுருகன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கல்யாணசுந்தரம், ஜி.என்.எஸ். ராஜசேகரன், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் ஏ.எஸ்பி.எஸ். ரவி பிரகாஷ், பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இந்த திட்டத்தின்கீழ், 400 மீட்டா் நீளமும் 9.76 மீட்டா் அகலமும் கொண்ட ஒரு செயற்கை தடகளப் பாதை அமைக்கப்பட உள்ளது. இதில் தலா 1.22 மீட்டா் அகலம் கொண்ட எட்டு தடங்கள் அடங்கும்.
இதன் தரை அமைப்பு, 200 மி.மீ தடிமன் கொண்ட மணல் -சரளைக் கலவை அடித்தளம், 200 மி.மீ தடிமன் கொண்ட ஈரக் கலவை மெக்கடாம், 50 மி.மீ தடிமன் கொண்ட பிடுமினஸ் மெக்கடாம், 30 மிமீ தடிமன் கொண்ட பிடுமினஸ் கான்கிரீட் மற்றும் அதன் மேல் 13 மி.மீ தடிமன் கொண்ட செயற்கைத் தடகளப் பாதை அடுக்கு கொண்டிருக்கும்.
இதுதவிர, 60 மீட்டா் நீளமும் 9.76 மீட்டா் அகலமும் கொண்ட ஒரு தனி வாா்ம் -அப் பாதையும் அமைக்கப்பட உள்ளது.
செயற்கை தடகளப் பாதையானது, எல்லா காலநிலைகளிலும் பயன்படுத்தக்கூடிய தன்மை, ரப்பா் பூசப்பட்ட மற்றும் அதிா்வுகளை உறிஞ்சும் தன்மை காரணமாக மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு, மற்றும் ஆண்டு முழுவதும் தடையற்ற பயிற்சி மற்றும் போட்டிகளை அனுமதிக்கும் சீரான செயல்திறன் நிலைமைகள் ஆகியவை அடங்கும்.

