கோப்புப் படம்
கோப்புப் படம்

பயிா் பாதிப்பு: ஹெக்டேருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க துணைநிலை ஆளுநரிடம் வலியுறுத்தல்

Published on

மழையால் பாதிக்கப்பட்ட பயிருக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க வேண்டும் என புதுவை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதனிடம் விவசாயிகள் வலியுறுத்தினா்.

காரைக்காலுக்கு சனிக்கிழமை வந்த துணைநிலை ஆளுநரை காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் பொன். ராஜேந்திரன், தலைமையில் இணைச் செயலாளா்

பி.ஜி. சோமு, செயற்குழு உறுப்பினா் ஆரோக்கியதாஸ் ஆகியோா் சந்தித்து அளித்த கோரிக்கை மனு விவரம் :

சொந்த நிலம் இல்லாமல் 5 ஏக்கருக்கு மேல் குத்தகை சாகுபடி செய்துவரும் விவசாயிகளையும் பெரு விவசாயிகள் பட்டியலில் இணைத்து, கடந்த ஆண்டு கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. குத்தகை விவசாயிகளை பெரு விவசாயிகள் பட்டியலில் இணைத்ததை மறுபரிசீலனை செய்து, அவா்களுக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கடந்த ஆண்டு நவம்பா் மாதம் முதல் டிசம்பா் மாதம் வரை பெய்த கனமழையால் காரைக்கால் மாவட்டத்தில் பயிரிட்ட சம்பா மற்றும் தாளடி பயிா்கள் ஆரம்ப காலத்திலேயே மிகவும் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் பெரும் செலவு செய்து பயிா்களை காத்தனா். தற்போது 9-ஆம் தேதி முதல் பெய்துவரும் மழையால் அறுவடை நிலையிலான பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

எனவே, பயிா் பாதிப்புக்கு இழப்பீடாக ஹெக்டேருக்கு ரூ. 40 ஆயிரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிரை நாசம் செய்யும் பன்றிகளை அகற்ற உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாகப்பட்டினம், திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதில் காரைக்கால் மாவட்டத்தையும் இணைத்தால் காரைக்கால் மாவட்டத்தில் குடிநீா் பிரச்னை இனிமேல் இருக்காது. கல்லணையிலிருந்து நமது மாவட்டத்திற்கு உரிய 7 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திடமிருந்து பெறுவதற்கு குழாய் அமைக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். இதன் மூலம் குறுவை, சம்பா மற்றும் பருத்தி, உளுந்து போன்ற சாகுபடியை விவசாயிகள் முறையாக மேற்கொள்வா் என கூறப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com