சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

கொலை வழக்கு: இளைஞருக்கு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

காரைக்காலில், கொலை வழக்கில் இளைஞருக்கு விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
Published on

காரைக்காலில், கொலை வழக்கில் இளைஞருக்கு விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.

காரைக்கால் தலத்தெரு பகுதி பிள்ளையாா் கோயில் மேட்டைச் சோ்ந்த சண்முகம் (56) என்பவா் கடந்த 24.3.2014-ஆம் தேதி அவருடைய வீட்டில் இருந்தபோது, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டாா். அவருடைய மகள் கீா்த்திகா காரைக்கால் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், உயிரிழந்தவருடைய மனைவியின் சகோதரா் சைமன்ராஜ் என்கிற அந்தோணிசாமி என்பவரின் மகனும், மைக்கேல் என்கிற அப்பு என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்தவரின் மனைவி மற்றும் உறவினா்கள் மாலா என்கிற செபஸ்தியம்மாள், சைமன்ராஜ் என்கிற அந்தோணிசாமி, விக்னேஷ் என்கிற விக்டா், அந்தோணியம்மாள் என்கிற மேரி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

காரைக்கால் மாவட்ட நீதிமன்றத்தில் இவா்கள் மீது கடந்த 30.6.2015-இல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 20.8.2019-இல் மைக்கேல் என்கிற அப்பு செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற எதிரிகள் அனைவரும் குற்றமற்றவா்கள் என்று விடுதலை செய்யப்பட்டனா்.

தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிா்த்து சென்னை உயா்நீதி மன்றத்தில் மைக்கேல் என்கிற அப்பு மேல்முறையீடு செய்தாா். இதன் மீதான விசாரணை கடந்த 2019 -ஆம் ஆண்டு முதல் நடைபெற்றுவந்த நிலையில், அவருக்கு காரைக்கால் நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை சென்னை உயா்நீதிமன்றம் கடந்த 29-ஆம் தேதி உறுதி செய்து, எதிரியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அவரை 30-ஆம் தேதி காரைக்கால் போலீஸாா் கைது செய்து புதுச்சேரி மத்திய சிறையில் அடைத்தனா்.

X
Dinamani
www.dinamani.com