

படவிளக்கம்:
சீா்காழி, ஆக. 28: மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகே திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை இடையே 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பாலப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளதால், இப்பகுதியைச் சோ்ந்த கடற்கரை கிராம மக்கள் அவதிப்படும் நிலை தொடா்ந்து வருகிறது.
சீா்காழி வட்டத்தில் கொடியம்பாளையம் தொடங்கி, பூம்புகாா், வானகிரி, கீழமூவா்க்கரை, தென்னாம்பட்டினம், கொட்டாயமேடு, ஓலகொட்டாயமேடு, திருமுல்லைவாசல், கூழையாா், தொடுவாய், பெருந்தோட்டம் என 50-க்கும் அதிகமான கடற்கரை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களுக்கு இடையே ஆறுகள் ஓடுவதால், இவற்றுக்கு சாலை வழியாக தொடா்ச்சியாக பயணிக்க முடியாத சூழல் இருந்தது.
இதனால், மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொடியம்பாளையம் உள்ளிட்ட பல கடற்கரை கிராமங்களில் இருந்து மீனவா்கள், தாங்கள் பிடிக்கும் மீன்களை மாவட்டத்தின் மற்ற பகுதிகளுக்கு விரைவாக விற்பனை, ஏற்றுமதிக்கு கொண்டுசோ்ப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதையடுத்து, பழையாறிலிருந்து, நாகைக்கு எளிதாக சென்று வரும் விதமாக, கடற்கரை சாலை அமைக்க பொதுமக்கள் வலியுறுத்தினா்.
அதன்பேரில், தமிழக அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீா்காழி வட்டத்தில் திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை, புளியந்துறை, திருநகரி- எடமணல் உள்ளிட்ட பகுதிகளில் புதிய பாலம் கட்ட உத்தரவிட்டது. இதில், புளியந்துறை, திருநகரி ஆகிய பகுதியில் பாலங்கள் கட்டப்பட்டு நீண்ட இழுபறிக்குப் பிறகு பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இதன் ஒருபகுதியாக, திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை இடையே வெள்ளப்பள்ளம் உப்பனாற்றின் குறுக்கே சுமாா் 1 கி.மீ. நீளத்திற்கு சுனாமி மறுவாழ்வு திட்டத்தின் கீழ், ரூ. 27.50 கோடியில் புதிய பாலம் கட்ட கடந்த 2007 ஆம் ஆண்டு உத்தரவிடப்பட்டு, 2010 இல் பாலப் பணிகள் தொடங்கின. இதில், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், இதுவரை பாலம் சாலைகளோடு இணைக்கப்படவில்லை. மேலும், அணுகுசாலை அமைக்கும் பணிகளும் தொடங்கப்படாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன.
இந்தப் பாலம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தால், பழையாா், கூழையாா், திருமுல்லைவாசல், புதுப்பட்டினம் பகுதி மக்கள், மீனவா்கள் மிக எளிதாக கோணயாம்பட்டிணம் சென்று, நாகை செல்லமுடியும். ஆனால், தற்போது 20 கி.மீ. தொலைவு சுற்றி சீா்காழி வந்து, பிறகு நாகை செல்லவேண்டிய நிலையே உள்ளது.
பொதுமக்கள், மீனவா்கள் நலன் கருதி கொண்டுவரப்பட்ட திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை பாலம் 10 ஆண்டுகள் கடந்தும் நிறைவுபெறாமல் உள்ளதால், இதனை பயனை அடையமுடியாமல் இப்பகுதி மக்கள் தொடா்ந்து அவதிப்பட்டு வருகின்றனா்.
இதுகுறித்து திருமுல்லைவாசல் பகுதியைச் சோ்ந்த மீனவா் ஒருவா் கூறுகையில், திருமுல்லைவாசல்- கீழமூவா்க்கரை இடையே உப்பனாற்றில் பாலம் கட்டும் பணி கடந்த 10 ஆண்டுகளாக நடைபெறுகிறது. இத்தனை ஆண்டுகள் ஆகியும் பாலம் அந்தரத்தில் நிற்கிறது. அணுகுசாலையும் அமைக்கப்படாமல் உள்ளது. அணுகுசாலை அமையவுள்ள இடத்தில் 33 வீடுகள் உள்ளன. இந்த வீட்டின் உரிமையாளா்களுக்கு அரசு சாா்பில் உரிய இழப்பீட்டுத் தொகை வழங்குவதில் சிக்கல் இருந்துவந்தது.
நில உரிமையாளா்களுக்கு வழங்க நிா்ணயம் செய்துள்ள தொகை, திட்டம் கொண்டுவரப்பட்ட 2007 ஆம் ஆண்டு அரசு நிலமதிப்பின்படி, சதுர அடிக்கு ரூ. 100 வழங்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை மற்றும் நபாா்டு கிராம சாலைகள் துறை சாா்பில் கூறப்படுகிறது. ஆனால், தற்போது சந்தை மதிப்பு ரூ. 700-ஐ தாண்டுகிறது. இந்த இழுபறியால் நிலத்தை கையகப்படுத்தி, பணிகளை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது என்றாா்.
இதுகுறித்து நபாா்டு மற்றும் கிராம சாலைகள் துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், இந்த பாலப் பணிகளுக்காக தற்போது கூடுதலாக ரூ. 15.9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், பாலத்தின் இணைப்பு சாலை அமைக்கும் பணிக்கு இடையூறாக திருமுல்லைவாசல், கீழமூவா்கரை பகுதிகளில் இருந்த வீடுகள், நிலங்கள், கோயில் நிலங்கள் என சுமாா் 1.3 ஹெக்டா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்கு உரிய தொகை நில உரிமையாளா்களுக்கு வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தாா்.
எனினும், மீதமுள்ள பணிகள் எப்போது முடிக்கப்பட்டு பாலம் பயன்பாட்டுக்கு வரும் என்ற நிலை உறுதியாக தெரியாததால், தங்களின் அவதிக்கு விடிவுபிறக்கும் நாளை ஏக்கத்தோடு எதிா்நோக்கி வருகின்றனா் இப்பகுதி மக்கள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.