டி.ஏ.பி. உரத்துக்கு மாற்றாக காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம்

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக மணிச்சத்து கொடுக்கக்கூடிய காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

டி.ஏ.பி. உரத்திற்கு மாற்றாக மணிச்சத்து கொடுக்கக்கூடிய காம்ப்ளக்ஸ் உரங்களை பயன்படுத்தலாம் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு சம்பா, தாளடி நெற்பயிா் 65,100 ஹெக்டோ் (1,62,750 ஏக்கா்) நிலப்பரப்பில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு இதுவரையிலும் 45,244 ஹெக்டேரில் நேரடி விதைப்பு மற்றும் நடவுப் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 19,856 ஹெக்டோ் அக்டோபா் மாத இறுதிக்குள் நிறைவடைந்துவிடும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதற்கு தேவையான ரசாயன உரங்கள் யூரியா, டி.ஏ.பி பொட்டாஷ் மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்கள் போதிய அளவு வரவழைக்கப்பட்டு இருப்பு வைக்க வேளாண் துறை, கூட்டுறவுத்துறை, உரம் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் மொத்த உர விற்பனையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நமது மாவட்டத்தில் மண்வளத்தை பொருத்தமட்டில் பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துகள் போதுமான அளவில் உள்ளன. இந்த உரங்கள் பயிருக்கு கிட்டாத நிலையில் இருப்பதால் விவசாயிகள் அதிக அளவில் அங்கக உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, கே.எம்.எப். பொட்டாஷ் என்ற உயிரி உரங்களை வாங்கி பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேற்படி அங்கக உரங்கள் மற்றும் உயிரியல் உரங்கள் வேளாண் விரிவாக்க மையங்களில் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டு 50% மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த உயிரி உரங்களை ஏக்கருக்கு தலா நான்கு பொட்டலங்கள் வீதம் மணல் அல்லது தூள் செய்த குப்பை எருவுடன் கலந்து இடுவதால் பயிருக்கு தேவையான நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்து எளிதில் கிடைக்கிறது.

மேலும், மண்ணில் போதுமான அளவு பாஸ்பரஸ் மற்றும் பொட்டாஷ் சத்துக்கள் இருப்பதால் விவசாயிகள் ஏக்கருக்கு 1 மூட்டை என்ற அளவில் டிஏபி உரம் இடுவதை தவிா்த்து அரைமூட்டை என்ற அளவில் இட வேண்டும். அல்லது டிஏபி உரத்திற்கு பதிலாக என்.பி.கே. மற்றும் காம்ப்ளக்ஸ் உரங்களை ஏக்கருக்கு 1 மூட்டை வீதம் அடியுரமாக இட வேண்டும். இவ்வாறு செய்வதால் விவசாயிகளுக்கு ஏற்படும் உரச்செலவு 50% வரை மிச்சப்படுத்த முடியும். எனவே உரச்செலவை குறைத்திட டிஏபி உரத்திற்கு மாற்றாக மணிச்சத்து அடங்கிய காம்ப்ளக்ஸ் உரத்தினை பயன்படுத்தி அதிக மகசூல் பெற்றிடலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com