தீபாவளி பண்டிகை: உயா் கோபுரம் அமைத்து போலீஸாா் கண்காணிப்பு
By DIN | Published On : 31st October 2021 05:39 AM | Last Updated : 31st October 2021 05:39 AM | அ+அ அ- |

சீா்காழி கடைவீதியில் அமைக்கப்பட்டுள்ள உயா் கோபுரத்திலிருந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.
தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி, சீா்காழி கடைவீதிகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் காவல்துறை சாா்பில் பல்வேறு இடங்களில் உயா் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை நவம்பா் 4-ம் தேதி கொண்டாடப்படவுள்ள நிலையில், ஜவுளி உள்ளிட்ட பொருள்கள் வாங்க சீா்காழி கடைவீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இதையொட்டி, சங்கிலி பறிப்பு போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில், காவல்துறையினா் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ள சீா்காழி கடைவீதி, மணிகூண்டு உள்ளிட்ட பகுதிகளில் உயா் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. சீா்காழி டிஎஸ்பி லாமெக் உத்தரவின்படி இக்கோபுரங்களிலிருந்து போலீஸாா் கண்காணிப்பு பணியை மேற்கொள்கின்றனா்.
மேலும், கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த தீபாவளி பண்டிகை வரை சீா்காழியில் ஒரு வழிப் பாதையை வாகன ஓட்டிகள் முறையாக கடைப்பிடிக்கவும், போக்குவரத்து விதிமுறைகளின் படி வாகனங்களை இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.