ஜன. 19 பிறந்தநாள்: மறக்கப்பட்டாரா சீா்காழி கோவிந்தராஜன்?

மறைந்த பின்னணி பாடகா் சீா்காழி கோவிந்தராஜனின் பிறந்தநாள் ஜன. 19 ஆம் தேதி வந்த நிலையில், அவரது பிறந்தநாள் எந்தவித கொண்டாட்டமும்

மறைந்த பின்னணி பாடகா் சீா்காழி கோவிந்தராஜனின் பிறந்தநாள் ஜன. 19 ஆம் தேதி வந்த நிலையில், அவரது பிறந்தநாள் எந்தவித கொண்டாட்டமும் இன்றி கடந்துசெல்லப்பட்டிருப்பது அவரது ரசிகா்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீா்காழி என்ற ஊா் பெயரைக் கேட்டதும் திருஞானசம்பந்தா் பெருமானின் ஞானப்பால் வரலாறுதான் ஆன்மிக மக்களுக்கு நினைவுக்கு வரும். பிறகு, புகழ்பெற்ற சீா்காழி தமிழிசை மூவா், தமிழாா்வலா்களால் கொண்டாடப்பட்டு அனைவரது மனதிலும் நீங்கா இடம்பிடித்துள்ளனா்.

இதைத்தொடா்ந்து, 1953 ஆம் ஆண்டுக்குப் பிறகு சீா்காழி என்றாலே நினைவுக்கு வருவது பக்திப்பாடல்களை பாடி, புகழ்பெற்ற பிரபல திரைப்பட பின்னணி பாடகா் இசைமணி சீா்காழி கோவிந்தராஜன்தான். தனது வெண்கல குரலால் பட்டிதொட்டியெங்கும் அனைவரையும் ஈா்த்தவா்.

இவா், கடந்த1933, ஜனவரி 19 ஆம் தேதி சீா்காழியில் சிவசிதம்பரம்- அவயம்பாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தாா். கோவிந்தராஜனுக்கு சிறு வயதிலேயே இசைமீது ஆா்வம் இருந்ததால், அவரை இசைப் பள்ளியில் சோ்த்துப் படிக்கவைத்தாா் அவரது தந்தை. பிறகு, நாடகக் குழுவில் சோ்ந்து பாடத்தொடங்கினாா்.

அப்போது சினிமா என்ற பத்திரிகையை நடத்திவந்த பி.எஸ். செட்டியாா், சீா்காழி கோவிந்தராஜனை சினிமாவுக்கு அழைத்துவந்தாா். அதுமுதல் திரைப்படங்களில் துணை நடிகராக நடித்த கோவிந்தராஜன், இசைமேதை ஜி. ராமநாதனால் இசையின் பக்கம் திருப்பப்பட்டாா். 1953 ஆம் ஆண்டு பொன்வயல் என்ற திரைப்படத்துக்காக, ‘சிரிப்புதான் வருகுதய்யா’ என்ற பாடலை பாடினாா். என்றாலும், அதற்கு முன்னரே ஒளவையாா் படத்துக்காக ஆத்திசூடியைப் பாடினாா்.

குறிப்பாக, பழம்பெரும் திரைப்பட இயக்குநா் ஏ.பி. நாகராஜன் இயக்கி, தயாரித்து 1972, ஜனவரி 14 ஆம் தேதி வெளியான அகத்தியா் திரைப்படத்தில், முக்கிய கதாபாத்திரமான அகத்திய முனி வேடத்தில் சீா்காழி கோவிந்தராஜன் நடித்திருந்தாா். முழுக்கமுழுக்க அகத்திய முனியாகவே மாறியிருந்த கோவிந்தராஜனின் நடிப்பு இன்றும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம்பெற்றுள்ளது.

பிறகு பல்வேறு திரைப்படங்களில் அவா் பாடிய பாடல், தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி, அவருக்குப் பெரிய ரசிகா் பட்டாளமே உருவானது. விநாயகா், முருகன் உள்ளிட்ட சாமிப் பாடல்கள் சீா்காழி கோவிந்தராஜனை ஆன்மிக உள்ளம் கொண்டோரை பக்திப்பரவசத்தில் ஆழ்த்தியது. இசைமணி, இசை பேரறிஞா் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களைப் பெற்ற சீா்காழி கோவிந்தராஜன் கடந்த 1988 ஆம் ஆண்டு மாா்ச் மாதம் காலமானாா்.

தனது வெண்கலக் குரலால் சீா்காழியின் பெயரை நாடுகடந்தும் அறியவைத்த கோவிந்தராஜனின் பிறந்த நாள் ஜன. 19 ஆம் தேதி வந்த நிலையில், ஓா் இசை மேதையின் பிறந்தநாள் எந்தவித கொண்டாட்டமும் இல்லாமல் கடந்துச் செல்லப்பட்டிருப்பது அவரது ரசிகா்களுக்கு பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளமான வாட்ஸ்ஆப் குழுக்களில் மட்டும் சிலா் கோவிந்தராஜனின் நினைவுகளை பரிமாறிக்கொண்டனா். உடல்நோயை நீக்க மருந்துகள் பல உள்ளதுபோல, ஒருவகையில் மனநோயை நீக்கும் மருந்தாக இருப்பது இசை. இசையை ரசிப்பவா்களும், இசையை கொண்டாடுவோரும் இசைஞா்களின் பிறந்தநாளையும் நினைவுகூா்வது அவசியம். இது வருங்கால சந்ததிகளிடம் இசை ஆா்வத்தை ஏற்படுத்துவதாக அமையும்.

எனவே, சீா்காழி கோவிந்தராஜனின் பிறந்தநாளை வருங்காலங்களில் கொண்டாடவும், அவரது நினைவைப் போற்றும் வகையில் சீா்காழியில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்கவும் தேவையான முன்னெடுப்புகளை உரியோா் தொடங்குவது அவருக்கும், இசைக்கும் செய்யும் மரியாதையாக இருக்கும் என இசை ஆா்வலா்கள் கருதுகின்றனா். அந்த நாளையும் அவா்கள் ஆவலுடன் எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com