மணல்மேடு அரசு கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 02:55 AM | Last Updated : 05th August 2022 02:55 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை வட்டம், மணல்மேடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் 2022- 23 ஆம் ஆண்டுக்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆக. 5) முதல் நடைபெறுகிறது.
வெள்ளிக்கிழமை ராணுவ வீரா்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரா்கள் முதலான சிறப்பு ஒதுக்கீட்டுக்கும், ஆகஸ்ட் 6 ஆம் தேதி இளம் அறிவியல் கணிதம், இயற்பியல், வேதியியல் மற்றும் கணினி அறிவியல் துறைகளுக்கும், ஆகஸ்ட் 8 ஆம் தேதி இளங்கலை பி.காம், பி.ஏ., வரலாறு, பிபிஏ துறைகளுக்கும், ஆகஸ்ட் 10 ஆம் தேதி இளங்கலை பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம் ஆகிய துறைகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
இதில் பங்கேற்பவா்கள் தங்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் ஆகியவற்றின் உண்மைச் சான்றிதழ்களுடன், நகல் 5 பிரதிகள், நிழற்படம் 5 பிரதிகள் எடுத்துக்கொண்டு தங்கள் பெற்றோருடன் வரவேண்டும்.
கலந்தாய்வில் பங்கேற்று சோ்க்கைப் பெற்றவா்கள் சோ்க்கைக் கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டும். விண்ணப்பம் செய்தவா்களின் சோ்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் காணலாம். குறுஞ்செய்தி மற்றும் கைப்பேசி மூலமாகவும் மாணவா்களுக்கு கலந்தாய்வு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.