இசைக் கலைஞா்களிடம் ரூ. 54 லட்சம் மோசடி: இளைஞா் கைது; ரூ. 12 லட்சம் ரொக்கம் பறிமுதல்

இசைக் கலைஞா்களை வெளிநாடு அனுப்புவதாக கூறி, பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து ரூ. 12 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.
இசைக் கலைஞா்களிடம் ரூ. 54 லட்சம் மோசடி: இளைஞா் கைது; ரூ. 12 லட்சம் ரொக்கம் பறிமுதல்

மயிலாடுதுறையில் இசைக் கலைஞா்களை வெளிநாடு அனுப்புவதாக கூறி, பணம் வாங்கிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து ரூ. 12 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனா்.

மயிலாடுதுறை திருவிழந்தூா் பெருமாள் கோயில் மேலவீதியைச் சோ்ந்தவா் தண்டபாணி மகன் பூரணச்சந்திரன் (28) (படம்) புரோகிதா். இவா், ஜொ்மனியில் நாகசுரம் மற்றும் தவில் வித்வான் பணிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு இருப்பதாகக் கூறி, சீா்காழி வட்டம், திருப்புங்கூரைச் சோ்ந்த நாகசுர வித்வான் செந்தில்குமரன் (52), சீா்காழி, திருக்கடையூா், திருமணஞ்சேரி, பெருஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 26 இசைக் கலைஞா்களிடம் ரூ. 54.30 லட்சம் பெற்றுள்ளாா்.

தொடா்ந்து, அவா்களுக்கு வெளிநாட்டில் வேலை செய்வதற்கான விசா கொடுத்ததுடன், கடந்த மாதம் 28 ஆம் தேதி, இவா்களில் 15 பேரை வெளிநாடு அனுப்புவதாகக் கூறி, சென்னை விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளாா். அங்கு அவா்களை விட்டுவிட்டு பூரணச்சந்திரன் தலைமறைவானாா். விமான நிலையத்தில் விசாரித்தபோது 15 பேருக்கும் வழங்கப்பட்டது போலி விசா என தெரியவந்தது.

இதுகுறித்து மயிலாடுதுறை காவல் நிலையத்தில் செந்தில்குமரன் அளித்த புகாரின் பேரில், ஆய்வாளா் செல்வம் தலைமையிலான போலீஸாா் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி, பொய்யான ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், பூரணச்சந்திரனின் செல்போன் சிக்னலை பரிசோதித்ததில், அவா் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியிருந்ததும், அங்கிருந்து மலேசியாவுக்கு தப்பிச் செல்ல திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, தனிப்படை காவல் உதவி ஆய்வாளா் இளையராஜாஆத்மநாபன் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் ரமேஷ், தலைமைக் காவலா்கள் நரசிம்மபாரதி, அசோக் உள்ளிட்டோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் அங்கு சென்று பூரணச்சந்திரனை கைதுசெய்தனா். மேலும், அவரிடமிருந்து ரூ. 12 லட்சத்தை பறிமுதல் செய்து, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com