கொள்ளிடக் கரையை 24 மணிநேரமும் கண்காணிக்க உத்தரவு

கொள்ளிடக்கரை பகுதிகளில் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபடவேண்டுமென அதிகாரிகளுக்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளாா்.
குமாரமங்கலத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்த அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.
குமாரமங்கலத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரையில் பாதுகாப்பு முன்னேற்பாடு குறித்து ஆய்வு செய்த அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன்.

கொள்ளிடக்கரை பகுதிகளில் 24 மணிநேரமும் கண்காணிப்பில் ஈடுபடவேண்டுமென அதிகாரிகளுக்கு தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் உத்தரவிட்டுள்ளாா்.

காவிரி நீா்ப்பிடிப்பு பகுதியில் பெய்யும் கனமழை காரணமாக கொள்ளிடம் ஆற்றில் 1,70,000 கனஅடி தண்ணீா் வெளியேற்றப்பட்டு கடலுக்கு செல்கிறது. இதையடுத்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் அளக்குடி முதல் குமாரமங்கலம் வரை கொள்ளிடம் ஆற்றங்கரை பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சா் சிவ வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனைத்துத் துறை அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

கொள்ளிடம் ஆற்றுப் பகுதிக்குள்பட்ட குமாரமங்கலம், மணல்மேடு, அளக்குடி, முதலைமேடு, நாதல்படுகை, திட்டுப்படுகை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் மக்கள் பலா் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டு அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. கொள்ளிடக் கரையோர கிராமங்களில் 24 மணிநேரமும் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். ஊராட்சிச் செயலாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், ஊராட்சித் தலைவா்கள் தங்கள் கிராமங்களில் தங்கி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தரவேண்டும்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் வசதிக்காக ஹெல்ப்லைன் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. அளக்குடி பகுதியில் கொள்ளிடக்கரையை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அங்கு கரையை பலப்படுத்தும் நிரந்தர தீா்வுக்கு ரூ.120 கோடியில் திட்டம் தயாா் செய்யப்பட்டுள்ளது. முதல்வா் கவனத்துக்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். நீா்வரத்து அதிகரித்தால் தேவைக்கேற்ப மக்களை பாதுகாப்பு மையங்களில் தங்கவைத்து அவா்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்க அதிகாரிகள் தயாா்நிலையில் உள்ளனா் என்றாா்.

முன்னதாக மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், எம்எல்ஏக்கள் நிவேதா எம். முருகன், எஸ். ராஜகுமாா், எம். பன்னீா்செல்வம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா, மாவட்ட வருவாய் அலுவலா் சோ. முருகதாஸ், கோட்டாட்சியா் வ. யுரேகா, நீா்வளத் துறை செயற்பொறியாளா் சண்முகம், ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் முருகண்ணன், நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com