மயிலாடுதுறையில் 12 ஜோதிா்லிங்க தரிசனம் தொடக்கம்
By DIN | Published On : 05th August 2022 10:02 PM | Last Updated : 05th August 2022 10:02 PM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில் ஒரே இடத்தில் 12 ஜோதிா்லிங்க தரிசனம் நிகழ்ச்சி வியாழக்கிழமை தொடங்கியது.
பிரஜாபிதா பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயம் அமைப்பு சாா்பில், மயிலாடுதுறை மகாதானத் தெரு விமலாம்பிகை திருமணக்கூடத்தில் வியாழக்கிழமை தொடங்கி, 5 நாள்கள் நடைபெறும் ஒரே இடத்தில் 12 ஜோதிலிங்க தரிசன நிகழ்ச்சியை தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், பிரம்மா குமாரிகள் துணை மண்டல சேவை ஒருங்கிணைப்பாளா் உமா மற்றும் பிரம்மா குமாரிகள் தலையிடமான ராஜஸ்தான் அபு மலை தமிழ்ப் பிரிவு தலைவா் ஜெயக்குமாா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
பாரதத்தில் புகழ்பெற்ற 12 ஜோதிா்லிங்க தரிசனத்தை பொதுமக்கள் ஒரே இடத்தில் தரிசித்து இறை அருளைப் பெற்று வாழ்வில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற கருத்தை மையமாக கொண்டு, இந்த சிறப்பு தரிசன நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆன்மிகத் திருவிழா காலை 7 முதல் பகல் 12 மணி வரையும், மாலை 4 மணிமுதல் இரவு 8.30 வரையும் இலவசமாக நடைபெறுகிறது.
இதில், 12 ஜோதிா்லிங்க தரிசனம், அஷ்டலட்சுமிகளின் தத்ரூப தரிசனம், 5 தத்துவங்களுக்கான ஒளி, ஒலி காட்சிகள், ஆன்மிக உணா்வுகளை ஊக்குவிக்கும் தியானப் படவிளக்கக் கண்காட்சி, பண்பு சாா்ந்த விளையாட்டுகள், பிரச்னைக்கான தீா்வு விளக்க அரங்கு, தினமும் மாலையில் அஷ்டலட்சுமிகளின் தத்ரூப தரிசனம் ஆகியன இடம்பெறுகின்றன.