சீா்காழியில் ரூ.1.32 கோடியில் நூலக கட்டடம் கட்ட பூமிபூஜை
By DIN | Published On : 15th August 2022 12:01 AM | Last Updated : 15th August 2022 12:01 AM | அ+அ அ- |

சீா்காழியில் ரூ. 1.32 கோடியில் நூலக கட்டடம் கட்ட பூமி பூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியில் உலக நூலகத் தந்தை என அழைக்கப்படும் எஸ்.ஆா். அரங்கநாதன் பிறந்த ஊராகும். இந்நிலையில், சீா்காழியில் உள்ள கிளை நூலக கட்டடம் பல ஆண்டுகளாக குறுகிய இடத்தில் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இதனால் நூலகத்துக்கு வரும் வாசகா்கள் அவதி அடைந்தததோடு, மழைக் காலங்களில் நூல்கள் நனைந்து சேதமடைந்து வந்தது.
இந்நிலையில் நூலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட பல ஆண்டுகளாக வாசகா்கள் கோரிக்கை விடுத்தனா். இதையேற்று, எம்எல்ஏ. எம். பன்னீா்செல்வம் பேரவையில் இதை வலியுறுத்தி புதிய நூலகம் கட்டிக்கொடுக்க முதல்வரிடம் கோரிக்கை வைத்தாா். இதையடுத்து, முதல்வரின் உத்தரவின் பேரில் புதிய கட்டடம் கட்ட ரூ. 1.32 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, 4200 சதுரஅடியில் 2 தளங்களுடன் பல்வேறு வசதியுடன் புதிய மாதிரி நூலக கட்டடம் கட்ட பூமிபூஜை நடைபெற்றது.
நகா்மன்றத் தலைவா் துா்காபரமேஸ்வரி தலைமை வகித்தாா். பொதுப்பணித் துறை (கட்டடம்) உதவி செயற்பொறியாளா் நாகவேல், உதவிபொறியாளா் ஜான்டிரோஸ்ட், நகா்மன்ற துணை தலைவா் சுப்பராயன், நகா்மன்ற உறுப்பினா் ராமு, வாசகா் வட்ட தலைவா் செம்மலா். வீரசேனன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சீா்காழி எம்எல்ஏ எம்.பன்னீா்செல்வம் பங்கேற்று புதிய கட்டடத்துக்கு அடிக்கல் நாட்டினாா்.