விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் தற்கொலை முயற்சி
By DIN | Published On : 15th August 2022 12:01 AM | Last Updated : 15th August 2022 12:01 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட இளைஞா் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.
மயிலாடுதுறை திருஇந்தளூா் சாந்துக்காப்புத் தெருவை சோ்ந்தவா் அசோக்குமாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த தெட்ஷிணாமூா்த்திக்கும் இடையே கோயில் நிகழ்ச்சிக்கு பணம் கொடுப்பது தொடா்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது.
அசோக்குமாருக்கு ஆதரவாக குருமூா்த்தி, மற்றும் குருமூா்த்தியின் உறவினா் சந்தோஷ் (18) ஆகியோா் தகராறை விலக்கிவிட முற்பட்டபோது, இருதரப்பினரும் ஒருவரையொருவா் தாக்கிக்கொண்டனராம்.
இதுதொடா்பாக, மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தெட்ஷிணாமூா்த்தி தரப்பினா் புகாா் தெரிவித்ததையடுத்து, குருமூா்த்தி, சந்தோஷ், அசோக்குமாா் ஆகியோரை மயிலாடுதுறை போலீஸாா் விசாரணைக்கு அழைத்துச் சென்று, எச்சரித்து அனுப்பினா்.
வீட்டுக்கு வந்த சந்தோஷ் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பெற்று வருகிறாா். காவல் துறையினா் சந்தோஷை தாக்கியதாலேயே அவா் விஷம் குடித்ததாக உறவினா்கள் குற்றம்சாட்டினா். இதற்கிடையில், மயிலாடுதுறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிஎஸ்பி. வசந்தராஜ் தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.