பலத்த மழை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 5,000 ஏக்கா் பயிா்கள் சேதம்
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை மாவட்டத்தில் பெய்த பலத்த மழை காரணமாக சுமாா் 5,000 ஏக்கரில் பயிரிடப்பட்டு, அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிா்கள் புதன்கிழமை தண்ணீரில் சாய்ந்து சேதமடைந்தன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு தினங்கள் மாலை நேரத்தில் பலத்த மழை பெய்தது. புதன்கிழமை காலை நிலவரப்படி மயிலாடுதுறையில் 45 மி.மீட்டா், மணல்மேட்டில் 70 மி.மீட்டா் மழை பதிவானது. மழை காரணமாக தாழ்வானப் பகுதிகளில் வயல்களில் தண்ணீா் தேங்கியுள்ளது.
இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் வழக்கமான பரப்பளவைவிட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. மாவட்டத்தில் 92 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இவற்றில் பல இடங்களில் நெற்பயிா்கள் அறுவடைக்கு தயாா் நிலையில் உள்ளன.
ஆனால், இதுவரை மாவட்டத்தில் 8 இடங்களில் மட்டுமே அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. எனினும், கடந்த ஆண்டு திறக்கப்பட்ட அனைத்து கொள்முதல் நிலையங்களும் நிகழாண்டும் திறக்கப்படும் என்ற நம்பிக்கையில், முன்கூட்டியே அறுவடைப் பணிகளை முடித்த விவசாயிகள் தங்கள் நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் முன் அடுக்கிவைத்து, அவற்றை தாா்ப்பாய் கொண்டு மூடிவைத்து பாதுகாத்து வருகின்றனா்.
இந்நிலையில், திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாள்கள் பெய்த பலத்த மழை காரணமாக மயிலாடுதுறையில் சோழம்பேட்டை, திருஇந்தளூா், கோழிக்குத்தி, அருண்மொழித்தேவன், கொருக்கை, தாழஞ்சேரி, கடுவங்குடி, பொன்னூா், பாண்டூா், கொற்றவநல்லூா், கீழமருதாந்தநல்லூா் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தாழ்வானப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த குறுவைப் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று மாவட்டம் முழுவதும் சுமாா் 5,000 ஏக்கருக்கும் மேல் சேதமடைந்துள்ளதாகவும், தண்ணீரில் சாய்ந்துள்ள நெல்மணிகளை ஓரளவு காப்பாற்றி அறுவடை செய்தாலும், அதிக சேதம் ஏற்படும் என்றும், ஈரப்பதம் அதிகம் உள்ளதாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய மாட்டாா்கள் என்பதால் மிகக்குறைந்த விலைக்கு தனியாா் வியாபாரிகளிடம் விற்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் விவசாயிகள் கவலை தெரிவித்தனா்.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் அறிவிக்க வேண்டும் என்றும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் தாமதமின்றி உடனடியாக திறக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.