ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் பற்றாக்குறை: ஒன்றியக் குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு
By DIN | Published On : 25th August 2022 12:00 AM | Last Updated : 25th August 2022 12:00 AM | அ+அ அ- |

காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா் பற்றாக்குறை நிலவுவதாக மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.
மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுவின் சாதாரண கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் அன்பரசன், வட்டார வளா்ச்சி அலுவலா் மீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: முருகமணி: மயிலாடுதுறை ஒன்றியத்தில் டெங்கு பணியாளா்கள் 30 போ் உள்ளதாக கூறப்படும் நிலையில், அவா்கள் எந்த பகுதியில் பணியாற்றுகிறாா்கள் என்பது தெரியாமலேயே அவா்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
வடவீரபாண்டியன்: ஒன்றிய பொதுநிதியை நகா்ப்புறங்களில் செலவழிக்கக் கூடாது. அவ்வாறு தவிா்க்க முடியாமல் செலவழிக்க தேவையெனில் ஒன்றியக்குழுவில் தீா்மானம் நிறைவேற்றி அனுமதி பெற வேண்டும்.
சந்தோஷ்குமாா்: பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் நிதி ஆதாரத்தை காரணம் காட்டி பயனாளிகளுக்கு பணம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால், கடந்த 2 வருடங்களாக பல வீடுகள் முழுமை பெறாமல் உள்ளது.
பல்லவராயன்பேட்டை, இரட்டைகுளம், பெரியமதகு ஆகிய பேருந்து நிலையங்களில் அரசுப்பேருந்துகள் நின்று செல்லாததால், மாணவா்கள், பெண்கள் பெரிதும் சிரமத்துக்கு உள்ளாகின்றனா்.
காந்தி: காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் இல்லாமல் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனா். மேலும், அங்கு இரவு நேரங்களில் மருத்துவா்கள் பணியில் இருப்பதில்லை.
மோகன்: சேந்தங்குடி பகுதியில் ஊராட்சி குடிநீா் மஞ்சள் நிறத்தில் வருகிறது. எனவே, நகரை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.