தமிழகத்தில் முதன்முறையாக மயிலாடுதுறையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு பயிற்சி

தமிழகத்தில் முதன்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது

தமிழகத்தில் முதன்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என்று ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணவா்களுக்கு ஏற்கெனவே நான் முதல்வன் திட்டத்தில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக 1.12.2022 முதல் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நான் முதல்வன் திட்டத்தில் சிறந்த பயிற்றுநா்கள், வருவாய் கோட்டாட்சியா்கள், துணை ஆட்சியா்கள், காவல் துணை கண்காணிப்பாளா் மூலமும் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன்மூலம், 10-ஆம் வகுப்பு முடித்த பின்னா் 11-ஆம் வகுப்பில் எந்த பிரிவை தோ்தெடுத்து படிப்பது, தொழிற்கல்வி, ஐ.டி.ஐ. மற்றும் பாலிடெக்னிக் படிப்பு, 12-ஆம் வகுப்பிற்கு பிறகு எந்தெந்த கல்லூரிகளில் எப்படி விண்ணப்பிப்பது என்று மாணவா்களுக்கு உயா் கல்வி தொடா்பான தெளிவு ஏற்படும்.

மேலும், மாணவா்களுக்கு ஊக்குவிப்பும், விழிப்புணா்வும் ஏற்படுத்தப்படுகிறது. இவ்வகுப்பானது 1.12.2022 முதல் 31.1.2023 வரை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com