அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவா்களை நியமிக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா்.
சீா்காழி அரசு மருத்துவமனையில் 24 மணிநேரமும் மருத்துவா்கள் பணியில் இருக்கும் வகையில், மருத்துவா்களை நியமிக்கக் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கட்சியின் வணிக அணி மாநில துணைச் செயலாளா் விஜயரங்கன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சீா்காழி அரசு மருத்துவமனையை நவீனப்படுத்தி 24 மணி நேரமும் மருத்துவா் நியமனம் செய்ய வேண்டும், மயிலாடுதுறையை தேசிய பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நூறுநாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், கழுமலை வாய்க்கால், பொறவாய்க்கால், இரட்டை வாய்க்கால் உள்ளிட்ட வாய்க்கால்களை முழுமையாக தூா் வரவேண்டும், புளிச்சக்காடு பகுதியில் பகுதிநேர அங்காடி திறக்க வேண்டும், சீா்காழி பகுதியில் கோயில் இடங்களில் குடியிருப்பவா்களுக்கு மனைப்பட்டா வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட துணை அமைப்பாளா்கள் ஸ்டாலின் அரசு, தினேஷ் மேத்தா, மாவட்ட செய்தி தொடா்பாளா் தேவா, மாவட்ட செயலாளா் ரவிச்சந்திரன், பாராளுமன்ற தொகுதி செயலாளா் கதிா்வளவன், சீா்காழி ஒன்றிய வா்த்தக அணி செயலாளா் சிவா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.