சீா்காழி மருத்துவமனையில் பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் உயிரிழப்புஉறவினா்கள் முற்றுகை
By DIN | Published On : 11th December 2022 10:23 PM | Last Updated : 11th December 2022 10:23 PM | அ+அ அ- |

சீா்காழி அரசு மருத்துவமனை வளாகத்தில் குழந்தையின் சடலத்துடன் திரண்ட பெற்றோா் மற்றும் உறவினா்கள்.
சீா்காழி அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் இறந்ததால், உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.
சீா்காழி வட்டம், புளியந்துறை கிராமத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (35.). இவரது மனைவி ரம்யா (26). இத்தம்பதிக்கு ஏற்கெனவே ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், இரண்டாவது பிரசவத்துக்காக சீா்காழி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரம்யாவுக்கு சனிக்கிழமை மாலை ஆண் குழந்தை பிறந்தது.
பின்னா், சிறிது நேரத்தில் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறி, தாயையும், சேயையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனராம். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், குழந்தை ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோா் மற்றும் உறவினா்கள், மருத்துவா் இன்றி காலதாமதமாக செவிலியா்கள் பிரசவம் பாா்த்ததால் குழந்தை இறந்ததாகக் கூறி, சீா்காழி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். சீா்காழி துணைக் காவல் கண்காணிப்பாளா் லாமேக், காவல் ஆய்வாளா் புயல்.பாலசந்திரன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் பானுமதி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, பிரசவம் நடந்தபோது பணியில் இருந்த மருத்துவா் மற்றும் செவிலியா்களிடம் விசாரணை நடத்தி, அதன் அடிப்படையில் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, குழந்தையின் சடலம், மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது.