தேசியக் கல்விக் கொள்கையை திரும்பப் பெறக்கோரி ஆசிரியா்கள் பிரசாரம்
By DIN | Published On : 11th December 2022 12:00 AM | Last Updated : 11th December 2022 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறையில் பிரசாரத்தில் ஈடுபட்ட இந்தியப்பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா்.
தேசியக் கல்விக் கொள்கை 2022-ஐ திரும்பப் பெற மயிலாடுதுறையில் இந்தியப்பள்ளி ஆசிரியா் கூட்டமைப்பினா் சனிக்கிழமை பிரசார இயக்கம் நடத்தி வலியுறுத்தினா்.
மயிலாடுதுறை மாவட்டக் கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற பிரசாரத்துக்கு, தமிழ்நாடு முதுகலை பட்டதாரி ஆசிரியா் சங்க மாவட்ட தலைவா் ஆா். கலைவாணன் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் மா. வைத்தியநாதன், தமிழ்நாடு உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் கழக மாவட்ட தலைவா் த. ஆதீஸ்வரன், தலைமையிட செயலாளா் எஸ். ஹரிஹரன், ஆரம்பப் பள்ளி கூட்டணி கல்வி மாவட்ட செயலாளா் ஆா். தேன்மொழி, நலத்துறை செயலாளா் எஸ். முருகன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
இதில், தேசிய கல்விக் கொள்கை 2022-ஐ திரும்பப் பெற வேண்டும், தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இப்பிரசார இயக்கம் கொள்ளிடம், செம்பனாா்கோவில், குத்தாலம் ஆகிய வட்டாரங்களிலும் நடைபெற்றது.
சீா்காழியில்: இதே கோரிக்கைகளை வலியுறுத்தி சீா்காழியில் நடைபெற்ற பிரசார இயக்கத்துக்கு தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்க மாநில துணைத்தலைவா் அசோக்குமாா் தலைமை வகித்து பேசியது: தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் படி மும்மொழி கொள்கை என்பது குழந்தைகளின் கல்வி சுமையை அதிகரிப்பதோடு தாய்மொழிக் கல்வியை கேள்விக் குறியாக்கும், 20 மாணவா்களுக்கு கீழுள்ள பள்ளிகள் மூடப்படும் என்பதும், வளாகப் பள்ளிகள் அமைக்கப்படும் என்பதும் ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக்கக் கூடியதாக அமையும். இந்த கொள்கையின்படி தற்போதுள்ள 850 பல்கலைக்கழகங்கள் மற்றும் 48,000-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இனி 1,5000 உயா்கல்வி நிறுவனங்களாக குறைக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டு விடும். எனவே, தேசிய கல்விக் கொள்கை 2020 உடனடியாக மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்றாா்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாநில துணைப் பொதுச் செயலாளா் கமலநாதன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளா் விஜயகுமாா், வட்டாரத் தலைவா் ராஜேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.