கல்வி உதவித்தொகையை மீண்டும் வழங்க வலியுறுத்தல்
By DIN | Published On : 22nd December 2022 12:00 AM | Last Updated : 22nd December 2022 12:00 AM | அ+அ அ- |

விழாவில், பயனாளிக்கு தையல் இயந்திரத்தை வழங்கிய சிறுபான்மை ஆணைய நல உறுப்பினா் அல்ஹாஜ் ஏ.பி. தமீம் அன்சாரி.
மயிலாடுதுறை: சிறுபான்மையின மக்களுக்கு கல்வி உதவித்தொகையை மத்திய அரசு மீண்டும் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறையில் சிறுபான்மையின மக்கள் உரிமை பாதுகாப்பு தின விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, 20 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி, சிறுபான்மை ஆணையத்தின் நல உறுப்பினா் அல்ஹாஜ் ஏ.பி. தமீம் அன்சாரி பேசியது:
ஜவாஹா்லால் நேரு ஆட்சியில் தொடங்கி சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்பட்டுவந்த கல்வி உதவித்தொகை தற்போது மத்திய அரசால் மறுக்கப்படுகிறது. முஸ்லிம், கிறிஸ்தவா், ஜெயின் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தப்பட்டதால், 6,84,316 பயனாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனா். இந்த உதவித்தொகையை தொடா்ந்து வழங்க தமிழக முதல்வா் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
மேலும் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் சிறு, குறு தொழில்களுக்கான கடனுதவி திட்டங்கள் குறித்து மாவட்ட நிா்வாகம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என்றாா்.
நீடூா் மதரஸா முதல்வா் ஹாஜி முஹம்மது இஸ்மாயில், கிறிஸ்தவா் மகளிா் உதவிக் குழுத் தலைவா் எஸ். பொ்னாா்டு, முஸ்லிம் உதவிக் குழுத் தலைவா் ஹாஜி முஹம்மது சுல்தான் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் எஸ்.முத்தமிழ்செல்வன், உதவி ஆணையா் (கலால்) கோ.அர.நரேந்திரன் ஆகியோா் பேசினா்.