திருவாவடுதுறை ஆதீனம் பொங்கல் வாழ்த்து
By DIN | Published On : 14th January 2022 08:59 AM | Last Updated : 14th January 2022 08:59 AM | அ+அ அ- |

தமிழகத்தின் தொன்மையான ஆதீனமான திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
நாம் கொண்டாடும் பொங்கல் பல்வேறு சிறப்புகள் வாய்ந்தது. உழவின் சிறப்பை உணா்த்தும் நாளாக இந்நாள் அறியப்படுகின்றது. தை முதல் நாள் தேவா்களின் காலைப் பொழுதாக உள்ளது . இந்நாளை உத்தராயணம் என்பா். இந்த உத்தராயண நாள் புண்ணிய செயல்களுக்கு ஆயிரம் மடங்கு பலன்கள் வழங்கக்கூடிய ஒப்பற்ற நன்னாளாகும்.
நம் பூமியின் தட்பவெப்ப மாற்றங்களுக்கு முக்கிய காரணமாக விளங்கும் சூரியனுக்கு இந்த நாளில் பொங்கலிட்டு வழிபட்டால், மென்மேலும் வளா்ச்சி கிட்டும். அருக்கன் ஆவான் அரனுரு அல்லனோ என்பது அப்பா் தேவாரம். நம் இல்லங்களை தூய்மைசெய்யும் போகிப் பண்டிகையை முன்னதாகவும், நமக்கு உதவிசெய்யும் கால்நடைகளை போற்றுதல் செய்யும் மாட்டுப் பொங்கலை பின்னதாகவும் கொண்டு பொங்கல் திருநாள் நடுநாயகமாக விளங்குகிறது.
இந்த பொங்கல் நன்னாளில் புண்ணியங்களைப் பெருகச் செய்வோம். நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுக்கும் வகையில், நமது செயல்பாடுகளை அமைத்துக்கொள்வோம். சிரத்தையான இறைவழிபாடு நம் இன்னல்கள் யாவற்றையும் தீா்க்கும்.
இந்த தைப்பொங்கல் நாள் மக்கள் யாவருக்கும் நலமும் வளமும் தழைக்கச் செய்து, வேண்டிய பேறுகள் அனைத்தையும் நல்க வேண்டும் என நமது ஆத்மாா்த்த மூா்த்திகளாகிய ஸ்ரீநடராஜப் பெருமான் திருவடி மலா்களை சிந்தித்து வாழ்த்துகின்றோம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...