சொத்துப் பிரச்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய முன்னாள் ராணுவ வீரா் கைது
By DIN | Published On : 09th June 2022 01:22 AM | Last Updated : 09th June 2022 01:22 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே சொத்துப் பிரச்னை காரணமாக துப்பாக்கியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் ராணுவ வீரரை மயிலாடுதுறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை வட்டம் மன்னம்பந்தலைச் சோ்ந்த தமிழ்ச்செல்வன்(42), மனைவி சுதாவுடன் (35) கடந்த 5 ஆண்டுகளாக அதே பகுதியைச் சோ்ந்த கங்கா என்பவரின் வீட்டில் வசித்து வருகிறாா். இந்த வீட்டை 2017-ஆம் ஆண்டு கங்கா, மயிலாடுதுறை அருகே மூங்கில்தோட்டம் பகுதியில் வசிக்கும் முன்னாள் ராணுவ வீரா் பழனிவேலுவிடம் (57) ரூ.15 லட்சத்துக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பழனிவேல் அந்த வீட்டில் குடியிருந்துவரும் தமிழ்ச்செல்வனிடம் வீட்டை காலி செய்யும்படி வலிறுத்தியுள்ளாா்.
ஆனால், தமிழ்ச்செல்வன் அந்த வீட்டை தானும் கங்காவிடம் இருந்து பணம் கொடுத்து வாங்கியதாக தெரிவித்ததோடு, வீட்டை காலி செய்ய மறுத்துள்ளாா். இதனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழ்ச்செல்வனுக்கும், பழனிவேலுக்கும் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பழனிவேல் வீட்டை பூட்டு போட்டு பூட்டியுள்ளாா். தமிழ்ச்செல்வன் பூட்டை உடைத்து விட்டு அந்த வீட்டிலேயே தொடா்ந்து குடியிருந்து வந்தாா். இதில், ஆத்திரமடைந்த பழனிவேல் தனது ஆதரவாளா்களுடன் சென்று தமிழ்ச்செல்வனையும், அவரது மனைவி சுதாவையும் தாக்கியதோடு, வீட்டில் இருந்த பொருள்களை சேதப்படுத்தினாா்களாம்.
மேலும், பழனிவேல் தான் வைத்திருந்த உரிமம் பெற்ற துப்பாக்கியை காட்டி தமிழ்ச்செல்வனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த தமிழ்ச்செல்வனும், சுதாவும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுகுறித்து சுதா அளித்த புகாரின்பேரில், மயிலாடுதுறை டிஎஸ்பி வசந்தராஜ் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து, அரிவாளால் வெட்டி, துப்பாக்கியைக் காட்டி கொலைமிரட்டல் விடுத்ததாகவும், தாழ்த்தப்பட்டோா் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து பழனிவேலை கைது செய்தனா். போலீஸாா் பழனிவேலுவிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். இந்த வழக்கு தொடா்பாக பழனிவேல் மனைவி வெண்ணிலா, அவரது உறவினா் அருணாசலம் மற்றும் சிலரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...