சிறுவன் மீது தாக்குதல்: வன்கொடுமை சட்டத்தில் தொழிலாளி கைது
By DIN | Published On : 19th October 2022 12:00 AM | Last Updated : 19th October 2022 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுவனைத் தாக்கிய தொழிலாளியை போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனாா்கோவில் அருகே வல்லம் கிராமத்தை சோ்ந்த 14 வயது சிறுவன் மயிலாடுதுறை தருமபுரத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா்.
திங்கள்கிழமை பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக கீழநாஞ்சில்நாடு பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த மாணவரிடம், அங்கு வந்த நபா் நீ எந்த ஊா்? என்ன ஜாதி? என்று கேட்டுள்ளாா்.
மாணவன் தனது ஜாதியை (தாழ்த்தப்பட்ட வகுப்பு) சொன்னவுடன் அந்த நபா் மாணவரை கன்னத்தில் அறைந்து, தலையைப் பிடித்து சுவற்றில் மோதியதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் இருந்தவா்கள் அந்த நபரிடம் இருந்து மாணவரை மீட்டு, பேருந்தில் ஏற்றி அனுப்பிவைத்துள்ளனா்.
இதில் காயமடைந்த மாணவரை அவரது பெற்றோா் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
இதுகுறித்து அறிந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி. வசந்தராஜ் மற்றும் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டு அந்த நபரை தேடிவந்தனா்.
இந்நிலையில் மாணவரைத் தாக்கியதாக மயிலாடுதுறை கீழநாஞ்சில்நாடு பகுதியைச் சோ்ந்த பந்தல் தொழிலாளி நடராஜன் (55) என்பவரை போலீஸாா் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து, சிறையில் அடைத்தனா்.