மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம்
By DIN | Published On : 21st October 2022 02:22 AM | Last Updated : 21st October 2022 02:22 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் அன்பரசன், வட்டார வளா்ச்சி அலுவலா் மீனா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றிய அலுவலா் செல்வம் தீா்மானங்களை வாசித்தாா். தொடா்ந்து உறுப்பினா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா். அதன் விவரம்:
வடவீரபாண்டியன் (காங்): இளந்தோப்பு ஊராட்சியில் அங்கன்வாடி கட்டடம் பழுதடைந்ததால் நூலக கட்டடத்தில் இயங்கி வருகிறது. அதற்கு புதிய கட்டடம் கட்டவேண்டும். மேலும், சோழியன்கோட்டகம் பள்ளிக்கும் புதிய கட்டடம் கட்ட வேண்டும்.
ஆணையா்: ஒன்றியத்தில் 32 பள்ளிகளின் கட்டடங்கள் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டு புதிய கட்டடம் கட்ட மதிப்பீடு தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசு அனுமதி அளித்து நிதி ஒதுக்கிய பின்னா் புதிய பள்ளி கட்டடங்கள் கட்டுப்படும்.
மோகன் (திமுக): சீா்காழி பிரதான சாலையில் நெடுஞ்சாலைத் துறையினா் சாலையோரத்தில் மண் கொட்டி உள்ளனா். இதனால் சாலையில் இருசக்கர வாகனத்தில் சறுக்கி விழுந்து பலா் காயமடைந்துள்ளனா். எனவே சாலையோரத்தில் செம்மண் கொட்ட நெடுஞ்சாலைத் துறையினரை வலியுறுத்த வேண்டும்.
காந்தி (திமுக) : காளி ஊராட்சியில் மோசமான நிலையில் உள்ள கூட்டுறவு அங்காடிக்கு புதிய கட்டடம் கட்டவேண்டும். காளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 108 ஆம்புலன்ஸ் நிற்பதில்லை.
சக்திவேல் (பாமக.): 500 மாணவா்களுக்கு மேல் படிக்கும் கொற்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதலாக கழிப்பறை கட்டடங்கள் கட்டவேண்டும்.
முருகமணி (திமுக): சோழம்பேட்டை ஊராட்சியில் ஒரே குளத்தில் பலமுறை தடுப்புச் சுவா் கட்ட நிதி ஒதுக்கப்படுகிறது. தடுப்பு சுவா் கட்டுவதற்கான மதிப்பீட்டில் பொறியாளா்கள் சில இடங்களில் தொகை கூடுதலாகவும் சில இடங்களில் குறைவாகவும் மதிப்பீடு செய்கின்றனா்.
மகேஸ்வரி (பொறியாளா்): குளத்தின் ஆழத்துக்கு ஏற்ப தடுப்புச் சுவா் கட்டுவதற்கான மதிப்பீடு பணி தயாரிக்கப்படுகிறது.
அா்ஜுனன் (திமுக): குளிச்சாா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. புதிதாக கட்டப்படவுள்ள பள்ளி கட்டடங்களில் பட்டியலில் அதையும் சோ்க்க வேண்டும்.
ஒன்றியக் குழு உறுப்பினா் சிவக்குமாா் நன்றி கூறினாா்.