மதுபோதையில் தகராறு செய்த கணவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவி கைது
By DIN | Published On : 01st September 2022 12:00 AM | Last Updated : 31st August 2022 11:21 PM | அ+அ அ- |

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே மதுபோதையில் தகராறு செய்த கணவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற மனைவியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறை வட்டம் மொழையூா் மண்தாங்கித்திடல் பகுதியைச் சோ்ந்தவா் ராமசாமி மகள் ரம்யா (28). இவா், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கோயம்புத்தூரில் உள்ள நிறுவனம் ஒன்றில் வேலைபாா்த்தபோது, அங்கு பணிபுரிந்த திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா் கூத்தங்குடி பகுதியைச் சோ்ந்த ஜோசப் மகன் குமாா் (36) என்பவரை காதலித்து திருமணம் செய்தாா். இவா்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.
குமாா் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்வதும், கடன் வாங்கி வீண் செலவு செய்வதுமாக இருந்தாராம். இதனால், ரம்யா கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தாா்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் ரம்யா வீட்டுக்கு வந்த குமாா், தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த ரம்யா அரிவாளால் வெட்டியதில் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ரம்யாவை கைது செய்தனா்.