அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்தவா் கைது
By DIN | Published On : 09th September 2022 02:48 AM | Last Updated : 09th September 2022 02:48 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே அரசுப் பேருந்து கண்ணாடியை உடைத்த நபரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மயிலாடுதுறையில் இருந்து திருச்சிற்றம்பலத்துக்கு அரசுப் பேருந்து சேவை இயங்கி வருகிறது. புதன்கிழமை இரவு திருச்சிற்றம்பலத்தில் இருந்து மயிலாடுதுறைக்கு திரும்பி வந்தது. பேருந்தை ஓட்டுநா் துரைமாணிக்கம் இயக்கினாா். பேருந்து திருவிழந்தூா் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே மதுபோதையில் வந்த நபா் பேருந்தின் மீது கல் வீசி தாக்கியுள்ளாா்.
இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதம் அடைந்தது. பயணிகள் யாா் பாதிக்கப்படவில்லை.
இதுகுறித்து ஓட்டுநா் துரைமாணிக்கம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, அரசுப் பேருந்தை சேதப்படுத்திய திருவிழந்தூா் அம்பேத்கா் நகரை சோ்ந்த திலீப் எனும் பாலகிருஷ்ணனை(32) கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.