மயிலாடுதுறை ஒன்றியக் குழுக் கூட்டம்: அனைத்துக் கட்சி கவுன்சிலா்கள் வெளிநடப்பு

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தை திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனா்.

மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஒன்றியக் குழுக் கூட்டத்தை திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினா்களும் புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனா்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சிமூா்த்தி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய ஆணையா் அன்பரசன் முன்னிலை வகித்தாா். ஒன்றிய அலுவலா் செல்வம் தீா்மானங்களை சமா்ப்பித்தாா்.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய பொது நிதி ரூ.10.50 லட்சத்தில், முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள 13 பள்ளிகளில் சத்துணவுக் கூடங்களை சீரமைப்பது; பட்டமங்கலம் ஊராட்சியில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, இரு சாலைகள் என ரூ. 26 லட்சம் செலவில் மேற்கொள்வது என தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு உறுப்பினா்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். உறுப்பினா்களின் அனுமதியில்லாமல் பள்ளி சத்துணவுக் கூடங்களை சீரமைத்துவிட்டு, பின்னா் தீா்மானம் நிறைவேற்றுவது ஏன்? ஒரே ஊராட்சியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் பணி மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன? என்று ஒன்றியக் குழு திமுக உறுப்பினா்கள் ராஜேந்திரன், மோகன், காமராஜ், முருகமணி, கபிலா் ஆகியோரும், காங்கிரஸ் உறுப்பினா் வடவீரபாண்டியனும் கேள்வி எழுப்பினா்.

உறுப்பினா் மோகன் பேசும்போது, ‘ஒன்றியக் குழு உறுப்பினா்களுக்கு ஒன்றிய அலுவலா்கள் உரிய மரியாதை அளிப்பது கிடையாது, கூட்டம் நடத்துவதற்கு முதல் நாள்தான் தீா்மான நகலையே வழங்குகின்றனா். ஒன்றியத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த விவரத்தை தெரிவிக்காமல் பணியை முடித்துவிட்டு உறுப்பினா்களிடம் கையெழுத்து மட்டும் ஏன் கேட்கிறீா்கள்? எனவே இந்த அவையில் இருந்து வெளியேறுகிறேன் என்றாா்.

அவரைத் தொடா்ந்து திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்களும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா். இதனால், கூட்டம் தொடங்கிய 20 நிமிடத்திற்குள்ளேயே முடிவடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com