கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஆதீனங்கள் வழிபாடு 

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் தருமபுரம், மதுரை, வேளாக்குறிச்சி மற்றும் சூரியனார்கோயில் ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 
கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்: ஆதீனங்கள் வழிபாடு 
Published on
Updated on
1 min read

கொற்கை வீரட்டேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் தருமபுரம், மதுரை, வேளாக்குறிச்சி மற்றும் சூரியனார்கோயில் ஆதீனங்களின் ஆதீனகர்த்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். 

மயிலாடுதுறை தாலுகா கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான ஸ்ரீஞானாம்பிகை உடனாகிய வீரட்டேஸ்வரர் கோயில் உள்ளது. காவிரிக்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் இது 26-வது தலமாகும். சிவபெருமான் காமனை நெற்றிக்கண்ணால் எரித்த தலம். தீர்க்கவாகு முனிவர் இறைவனை அபிஷேகத்திற்கு கங்கை நீரை விரும்பித் தமது கைகளை நீட்ட கைகள் நீளாது குறுகியமையால் இவ்வூர் குறுக்கை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருகி கொற்கை என அழைக்கப்படுகிறது. 

சிறப்பு வாய்ந்த இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த வியாழக்கிழமை முதல்கால யாகசலை பூஜையுடன் தொடங்கியது. கும்பாபிஷேக தினமான ஞாயிற்றுக்கிழமை யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் முன்னிலையில் யாகசாலையில் இருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. தொடர்ந்து, கடங்கள் விமானத்தை அடைந்து அங்கு வேத விற்பன்னர்கள் வேதங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில், மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாசாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீனம் 18-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சத்தியஞான மகாதேவ தேசிக பரமாசாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருப்பனந்தாள் காசிமடத்து இளவரசு ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள், தருமையாதீன தம்பிரான் சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி, உயர்நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் குமரகுருபரன், ஆதீன தலைமை கண்காணிப்பாளர் சி.மணி, தருமபுரம் ஆதீனக்கல்லூரிச் செயலர் இரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வர் சி.சுவாமிநாதன், மருத்துவர் செல்வம், பாஜக மாவட்ட தலைவர் க.அகோரம், மத்திய அரசு வழக்குரைஞர் கே.ராஜேந்திரன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com