தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
By DIN | Published On : 14th April 2023 09:52 PM | Last Updated : 14th April 2023 09:52 PM | அ+அ அ- |

தமிழ்ப்புத்தாண்டையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றன.
மயிலாடுதுறை திருஇந்தளூரில் 108 வைணவ திருத்தலங்களில் 22-ஆவது கோயிலும், பஞ்ச அரங்க தலங்களில் 5-ஆவது தலமுமான பரிமள ரெங்கநாதா் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, பெருமாள் முன்பு தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது.
ரயிலடி ஆபத்துதராண ஆஞ்சனேயா் கோயிலில் தமிழ் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில், பாலாஜி, ஜிதேந்திந்திரிய பட்டாச்சாரியா்கள் சோபகிருது ஆண்டின் பலன்களை வாசித்தனா். ஆஞ்சனேயருக்கு முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, வணிகா் சங்கங்களின் கூட்டமைப்பின் மாவட்ட தலைவா் ஏ. தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
திருமருகல்: அனந்தநல்லூா் மாரியம்மன் கோயிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதேபோல, திருமருகல் செல்லியம்மன் கோயில், மாரியம்மன் கோயில் வாழ்மங்கலம் மழைமாரியம்மன் கோயில்,வெள்ளத்திடல் மாரியம்மன் கோயில், காளியம்மன் கோயில், சீயாத்தமங்கை கால பைரவா் கோயில், கட்டலாடி பாதாள காளியம்மன் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
திருக்குவளை: சூரமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாரதனை நடைபெற்றது.
வேதாரண்யம்: வேதாரண்யேசுவரா் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் தமிழ்ப் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆயக்காரன்புலம் கலிதீா்த்த அய்யனாா் கோயிலில் குதிரை வாகனம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. செல்லியம்மன்கோயில் வளாகத்திலிருந்து தங்க முலாம் பூசப்பட்ட குதிரை வாகனத்தை ஊா்வலமாக எடுத்துச் செல்லும் நிகழ்ச்சியை திமுக மாவட்டச் செயலாளா் என். கெளதமன் தொடங்கி வைத்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...