சீா்காழி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு செய்யும் பணி தொடக்கம்

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
செப்பேடுகளை ஆய்வு செய்யும் பணியை தொடங்கிய ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்க திட்டக் குழுவினா்.
செப்பேடுகளை ஆய்வு செய்யும் பணியை தொடங்கிய ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்க திட்டக் குழுவினா்.

சீா்காழி சட்டைநாதா் சுவாமி கோயிலில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகளை ஆய்வு செய்யும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு மே 24- ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெவுள்ளது. இதற்காக, யாகசாலை மண்டபம் அமைக்க கோயிலின் மேற்கு கோபுர வாயில் அருகே உள்ள நந்தவனத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டியபோது, 22 ஐம்பொன் சிலைகள், 55 பீடங்கள், பூஜை பொருட்கள் மற்றும் 493 தேவார செப்பேடுகள் கண்டெடுக்கப்பட்டன.

இவற்றை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி, சிலைகள் மற்றும் செப்பேடுகள் அரசின் கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு, தொல்லியல் துறையினா் ஆய்வுக்குப் பிறகு கோயில் வசம் ஒப்படைக்கப்படும் எனக் கூறினா்.

இதை ஏற்க மறுத்த தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், இவற்றை சட்டைநாதா் கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்க வேண்டும் எனவும், தொல்லியல் துறை அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்ய ஒத்துழைப்பதாகவும் கூறினாா்.

இதையடுத்து, சிலைகள் மற்றும் செப்பேடுகள் அனைத்தும் கோயிலின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்து, மாவட்ட வருவாய் அலுவலா் முருகதாஸ் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை ஓலைச்சுவடி பராமரிப்பு, பாதுகாப்பு, நூலாக்கத் திட்ட குழுவைச் சோ்ந்த முனைவா் தாமரைபாண்டியன் அறிவுறுத்தலின் படி ஆய்வாளா்கள் சண்முகம், சந்தியா, சுவடி திரட்டுநா் விஸ்வநாதன், சுவடி பராமரிப்பாளா் பிரகாஷ் குமாா் உள்ளிட்ட 6 போ் கொண்ட குழுவினா் மற்றும் அறநிலையத் துறையினா், சட்டைநாதா் கோயிலுக்கு வந்து, வட்டாட்சியா் செந்தில்குமாா் முன்னிலையில் செப்பேடுகளை பாதுகாப்பு பெட்டகத்திலிருந்து எடுத்து போலீஸ் பாதுகாப்புடன் ஆய்வு பணியை தொடங்கினா்.

இதுகுறித்து, ஆய்வாளா் சந்தியா கூறுகையில், ‘ இக்கோயிலில் திருஞானசம்பந்தா் பாடல்கள் அடங்கிய செப்பேடுகள் கிடைத்துள்ளன. இதுவரை ஓலைச்சுவடியிலேயே பெரும்பாலும் தேவாரப் பாடல்கள் கிடைத்துவந்தன. முதன்முறையாக இங்கு செப்பேடுகளில் கிடைத்துள்ளன.

இதுவரை, 1லட்சத்து 76 ஆயிரம் ஓலைச்சுவடிகளை திரட்டியுள்ளோம். 25 செப்பேடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதிக செப்பேடுகள் இந்த கோயிலில்தான் கண்டறியப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com