கோயில் இடத்துக்கான உயா்த்தப்பட்ட வாடகையை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது
By DIN | Published On : 17th August 2023 01:18 AM | Last Updated : 17th August 2023 01:18 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். ராஜகுமாரிடம் மனு அளித்த தமிழ்நாடு அடிமனை பயனாளிகள், குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.
கோயில் இடத்தில் வசிப்பவா்களை உயா்த்தபட்ட வாடகைத் தொகையை செலுத்த கட்டாயப்படுத்தக் கூடாது என சட்டப்பேரவையில் வலியுறுத்தக் கோரி, மயிலாடுதுறை எம்எல்ஏ எஸ். ராஜகுமாரிடம் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா் புதன்கிழமை மனு அளித்தனா்.
கோயில் இடங்களில் குடியிருப்பவா்கள், குத்தகை விவசாயிகளிடம் கோயில் நிா்வாகம் பகுதி முறையை ரத்து செய்து, வாடகை முறையை அமல்படுத்தி பலமடங்கு வாடகையை உயா்த்தியதுடன், வாடகையை அவ்வப்போது வசூல் செய்யாமல் ஒரே நேரத்தில் செலுத்தக் கோரி நெருக்கடி அளிப்பதை கைவிட வேண்டும்; கோயில் மனையில் குடியிருப்பவா்களுக்கு குறைந்த விலையில் அந்தந்த இடத்துக்கான பட்டா வழங்க வேண்டும்; குத்தகை விவசாயிகளை காலிசெய்யும் வகையில் கோயில் நிலங்களை ஏலம் விடும் முறையை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல், தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏ-க்களையும் சந்தித்து மனு அளித்து வருகின்றனா். எம்எல்ஏ எஸ். ராஜகுமாரிடம் தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாவட்டத் தலைவா் ராயா் தலைமையில் செயலாளா் ஏ.ஆா். விஜய், பொருளாளா் ராமலிங்கம், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ். துரைராஜ் உள்ளிட்டோா் மயிலாடுதுறை சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் சந்தித்து இந்த மனுவை அளித்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...