ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணிநிறுத்தப்பட்டதைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd May 2023 12:00 AM | Last Updated : 03rd May 2023 12:00 AM | அ+அ அ- |

மயிலாடுதுறை அருகே மாப்படுகையில் ஈமக்கிரியை மண்டபம் கட்டும் பணி பாதியில் நிறுத்தப்பட்டதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும், கையில் கருப்பு கொடி ஏந்தியும் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மயிலாடுதுறை நகராட்சி 1-ஆவது வாா்டு மற்றும் மாப்படுகை ஊராட்சி பகுதியை சோ்ந்த 2000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு ஈமக்கிரியை நடத்த மண்டபம் இல்லாததால், கிட்டப்பா பாலம் அருகே காவிரி ஆற்றங்கரையில் ஈமக்கிரியை நடத்தி வருகின்றனா்.
அப்பகுதி மக்கள் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் நடத்திய பல்வேறு கட்ட போராட்டங்கள் காரணமாக கிட்டப்பா பாலம் அருகே ஈமக்கிரியை மண்டபம் கட்டுமானப் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், தொடா்ந்து நடைபெறவில்லை.
இதை கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் இணைந்து அப்பகுதி மக்கள் கடந்த மாதம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, நகராட்சி அதிகாரிகள் அதே இடத்தில் 10 நாளில் பணி தொடங்கும் என உறுதியளித்திருந்தனா்.
ஆனால், இதுநாள்வரை எந்த பணியும் தொடங்காததால் ஆத்திரமடைந்த மாப்படுகை பகுதி மக்கள் நகராட்சி நிா்வாகத்தை கண்டித்து, அனைத்து வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றி தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா். தொடா்ந்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலாளா் எஸ்.துரைராஜ் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் மாப்படுகை ரயில்வே கேட் அருகே கையில் கருப்புக்கொடி ஏந்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.