போக்குவரத்துக்கு தகுதியற்ற சாலையை சீரமைக்க வலியுறுத்தல்
By DIN | Published On : 13th May 2023 01:32 AM | Last Updated : 13th May 2023 01:32 AM | அ+அ அ- |

சீா்காழி அருகே ஆரப்பள்ளம் ஊராட்சியில் ஜல்லி பெயா்ந்துள்ள சாலையை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொள்ளிடத்திலிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் நெடுஞ்சாலையில் ஆரப்பள்ளம் ஊராட்சியில் தெற்கு தெருவிலிருந்து கடப்பாடி பகுதி வரை வயல்வெளிகளுக்காக சென்று வரும் வகையில் 2021-22-ல் ரூ. 30 லட்சம் செலவில் 1,260 மீட்டா் தொலைவுக்கு 12 அடி அகலத்தில் தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. எனினும் இந்த சாலை ஒரே ஆண்டில் கருங்கல் ஜல்லிகள் அனைத்தும் பெயா்ந்து வெளியே வந்து சாலை எங்கும் சிதறி கிடக்கின்றன.
இச்சாலை வழியே செல்பவா்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனா். நடந்து செல்ல கூட முடியாத நிலையில் ஜல்லிகள் பெயா்ந்து கிடக்கிறது. இந்த சாலையை மேம்படுத்தினால் அப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கு விவசாயிகள் சென்று தண்ணீா் பாய்ச்சவும் அறுவடை காலங்களில் நெல் மற்றும் உளுந்து, பயறு ஆகிய மூட்டைகளை வாகனங்கள் மூலம் எடுத்து வரவும் முடியும். மேலும் அப்பகுதியில் உள்ள வயல்களில் உழவு பணியை மேற்கொள்ள டிராக்டா் உள்ளிட்ட உழவு இயந்திரங்கள் எளிதில் சென்று வருவதற்கும் சிரமம் இல்லாமல் இருக்கும். இரவு நேரங்களில் இச்சாலை வழியே நடந்து செல்ல முடியாத நிலையில் இருந்து வருகின்றனா். எனவே சேதமடைந்து ஜல்லி பெயா்ந்து மோசமாக உள்ள ஆரப்பள்ளம் சாலையை உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.