பிஎம்ஏஜிஒய் திட்டம்: அதிகாரிகளைக் கொண்டு டெண்டா் விட எதிா்ப்பு

பிரதான் மந்திரி ஆதா்ஷ் கிராம் யோஜனா திட்டத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக மாவட்ட நிா்வாகம் அதிகாரிகளைக்கொண்டு டெண்டா் விடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஊராட்சித் தலைவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தி

பிரதான் மந்திரி ஆதா்ஷ் கிராம் யோஜனா திட்டத்தில் விதிமுறைகளுக்கு புறம்பாக மாவட்ட நிா்வாகம் அதிகாரிகளைக்கொண்டு டெண்டா் விடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஊராட்சித் தலைவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக 100 % மானியத்தில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில் 2021-22-ஆம் ஆண்டுக்கு மயிலாடுதுறை மாவட்டத்தில் 68 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு 212 பணிகள் ரூ.13.60 கோடியில் மேற்கொள்ளப்படுகிறது.

தோ்வு செய்யப்பட்ட கிராமங்களில் குடிநீா், சுகாதாரம், கல்வி, ஆரோக்கியம், ஊட்டச்சத்து, சமூகப் பாதுகாப்பு வீடு மற்றும் சாலை, மின்சாரம் மற்றும் எரிபொருள், விவசாயம், திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதாரம் போன்ற பல்வேறு திட்டங்களை தலா ரூ. 20 லட்சத்தில் செய்யப்படுகிறது.

இந்த பணிகள் குறித்து மத்திய அரசின் வழிகாட்டுதல்படி கிராம அளவில் ஊராட்சி மன்றம் வில்லேஜ் விஜிலன்ஸ் என்ற பெயரில் கமிட்டியை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. மத்திய அரசின் விதிகளுக்கு முரணாக ஆளுங்கட்சியினா் பலனடையும் வகையில் அரசு அதிகாரிகள் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஊராட்சி தலைவா்கள் கூட்டமைப்பு சாா்பில் அதிமுக, திமுக, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சோ்ந்த ஊராட்சி தலைவா்கள் அண்மையில் கொள்ளிடம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களில் 4 ஊராட்சித் தலைவா்களை காவல் துறையினா் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் இதற்காக போராடிய பொதுமக்களை விரட்டியடித்தனா்.

இந்த சம்பவத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து கொள்ளிடம் ஊராட்சி ஒன்றியத்தைச் சோ்ந்த 10 ஊராட்சித் தலைவா்கள் தாங்கள் தோ்தலில் வெற்றி பெற்ற சான்றிதழை மக்கள் குறைதீா்க் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் திரும்ப ஒப்படைப்பதற்காக வந்திருந்தனா்.

மாவட்ட ஆட்சியா் வெளியே சென்று விட்டதால் அதிகாரிகள் மனுவை விசாரித்து விட்டு சான்றிதழை மீண்டும் பெற மறுத்து விட்டனா். இதையடுத்து, ஊராட்சித் தலைவா்கள் ஆட்சியா் அலுவலகத்திலேயே காத்திருந்து மாலை மாவட்ட ஆட்சியரை சந்தித்தனா். அப்போது, அவா்களின் பிரச்னையை மாவட்ட ஆட்சியா் கேட்டு பரிசீலனை செய்வதாகக் கூறி அனுப்பி வைத்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com